அடிதூள்.. நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி.. "அந்த" கோரிக்கைதான் காரணம்? பின்னணி
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இதற்கு பின் வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டெல்லி: நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் . இந்த நிலையில் அமைச்சர் பணி மட்டுமின்றி கட்சி ரீதியான பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் கவனித்து வருகிறார்.
சினிமா பணிகளை முற்றாக நிறுத்திவிட்டு அமைச்சரவை பணிகள் மீதுதான் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். மொத்தமாக சினிமாவில் இருந்தே உதயநிதி ஸ்டாலின் ஒதுங்கிவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின்
சமீபத்தில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இது மட்டுமின்றி தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது.உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் டெல்லி
இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அதை தொடர்ந்து திமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். அங்கே இருக்கும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதையடுத்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் சந்திப்பு நடத்த உள்ளார். பல்வேறு முக்கிய திட்டங்கள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டிய விளையாட்டு திட்டங்கள் குறித்து அவர் கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக சில மனுக்களை அளிக்க உள்ளார்.

ஸ்டாலின் பிறந்தநாள்
மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடக்கிறது. இதற்கு பல மாநில அரசியல் தலைவர்கள் வருகிறார்கள். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வருகிறார்கள். இவர்களை எல்லாம் சந்தித்து அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இது போக வேறு சில அரசியல் தலைவர்களையும் உதயநிதி ஸ்டாலின் இந்த பயணத்தில் சந்திக்க உள்ளார். இது போக நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மரியாதை
இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இந்த சந்திப்பிற்கு பின் வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக நீட் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் நேரடி கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று இதற்கான நேரம் கேட்கப்பட்டு இருந்த நிலையில், உடனே பிரதமர் அலுவலகம் உதயநிதி சந்திப்பிற்கு நேரம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நீட் விவகாரம் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications