அக்கவுண்ட்டுகளை முடக்க SBI-க்கு அன்னை தெரசா மிசினரிதான் கோரிக்கை அனுப்பியது: மத்திய அரசு
டெல்லி: தங்களது வங்கி கணக்குகளை முடக்கி வைக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிதான் (அன்னை தெரசா மிசினரி) கோரிக்கை அனுப்பியதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக மத்திய அரசுதான் தெரசா மிசினரியின் வங்கி கணக்குகளை முடக்கியதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வங்கி கணக்குகள் அனைத்தையும் மத்திய அரசு கிறிஸ்துமஸ் நாளில் முடக்கிவிட்டது. இதனால் 22,000 பேர் உணவும் மருந்துகளும் இல்லாமல் பரிதவிக்கின்றனர் என்பது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ட்வீட்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு
மமதாவின் இந்த ட்வீட் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. சிபிஎம் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

மத்திய அரசு விளக்கம்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010 மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011-ன் கீழ் உள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததற்காக மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழான புதுப்பித்தல் விண்ணப்பம் டிசம்பர் 25, 2021 அன்று நிராகரிக்கப்பட்டது. இந்தப் புதுப்பித்தல் மறுப்பை மறு ஆய்வு செய்ய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி இடமிருந்து கோரிக்கை அல்லது சீராய்வு விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை.

டிச.31 வரை நீட்டிப்பு
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு எண் 147120001-ல் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி பதிவு செய்யப்பட்டது, அக்டோபர் 31, 2021 வரை அதன் பதிவு செல்லத்தக்கதாக இருந்தது. பின்னர், புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் உள்ள பிற வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் சங்கங்களுடன் சேர்த்து டிசம்பர் 31, 2021 வரை இதன் பதிவு நீட்டிக்கப்பட்டது.

கணக்குகள் முடக்கப்படவில்லை
இருந்தபோதிலும், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் புதுப்பித்தல் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, சில பாதகமான உள்ளீடுகள் கவனிக்கப்பட்டன. பதிவில் உள்ள இந்த உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டு, புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு டிசம்பர் 31, 2021 வரை செல்லுபடியாகும். மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் எந்தக் கணக்குகளையும் உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. தனது கணக்குகளை முடக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியே கோரிக்கையை அனுப்பியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications