சுதேசி பொருட்களை பயன்படுத்த அழைப்புவிடுத்த மோடி வெளிநாட்டுப் பொருட்களை பயன்படுத்துகிறார்? - காங்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, 'சுதேசி உணர்வை' கடைப்பிடிக்கவும், 'மேட் இன் இந்தியா' பொருட்களை ஆதரிக்கவும் மக்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நம் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டிய நிலையில், உ.பி.யில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்த விஷயத்தை பழையபடி அழுத்திக் கூறியுள்ளார் மோடி. நாட்டுக்கு உண்மையான சேவை என்பது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதில் உள்ளது என்று அவர் பேசியுள்ளார். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் அவர் பயன்படுத்தும் சில பொருட்களும், அவற்றின் தயாரிப்பு நாடுகளும் இந்த முழக்கத்திற்கு முரணாக இருப்பதாகக் காங்கிரஸ் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் ரவிந்தர் காப்பூர் என்ற காங்கிரஸ் ஆதரவாளர் வெளியிட்ட தகவல்களின்படி, பிரதமர் மோடி பயன்படுத்தும் சில பிராண்டுகள் மற்றும் அவற்றின் பூர்வீக நாடுகள்:

- கார்: BMW (ஜெர்மனி) அல்லது Range Rover (பிரிட்டன்)
- சூட்: Giorgio Armani (இத்தாலி)
- ஷூக்கள்: Kenneth Cole (அமெரிக்கா)
- போன்: iPhone (அமெரிக்கா)
- வாட்ச்: Roger Dubuis (சுவிஸ்)
- கண்ணாடிகள்: Cooper Vision (அமெரிக்கா)
இந்தத் தகவல், எக்ஸ் பதிவில் சுமார் 2500 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. ஒருபுறம் 'சுதேசி'யை வலியுறுத்தும் பிரதமரின் பேச்சுக்கும், மறுபுறம் அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் உள்ள வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் தரப்பு விமர்சகர்கள் கூறுகின்றனர். இது வெறும் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், ஒரு தலைவர் தான் சொல்லும் கொள்கைகளுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவாதம், சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது.

அதேநேரம், பாஜக ஆதரவாளர்களோ, பிஎம்டபிள்யூ காரில் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன, இது குடியரசு தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவியிலுள்ளோருக்கு அவசியம் என்று வாதிடுகிறார்கள். மேலும், இந்த பட்டியலில் உள்ள பொருட்களைத்தான் பிரதமர் பயன்படுத்துகிறார் என்பதற்கு ஆதாரம் இல்லை. சில நேரங்களில் மோடி உள்நாட்டு தயாரிப்பு காலணிகளை அணிந்துள்ளதை பார்த்துள்ளோம் என்றும் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications