குடும்ப அரசியலுக்கு எதிரானவரா மோடி? 6 வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி? கப்சிப் பாஜக!
டெல்லி: மோடியின் அமைச்சரவையில் வாரிசு அரசியலுக்கு இடம் அளிக்கும் வகையில் பலருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பல விமர்சனங்களை எழுப்பி இருக்கின்றது.
குடும்ப அரசியலை தேர்தல் களத்தில் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார் பிரதமர் மோடி. தனது ஆட்சி மீண்டும் அமைந்ததும் பல மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் குடும்பக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் எச்சரித்து வந்தார்.

குறிப்பாக அவர், குடும்ப ஆட்சி பற்றி விமர்சிக்கையில் திமுகவைக் குறிவைத்து தாக்கினார். ஆனால், 3ஆவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மோடியின் அமைச்சரவையில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட்டுள்ளதா என்றால், அதுதான் இல்லை.
அவரது அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க 6 அரசியல் வாரிசுகள் இடம்பிடித்துள்ளனர் என்பது வியக்க வைக்கும் செய்தி. அதேபோல் அவரது அமைச்சரவையில் 33 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
கூடவே சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட 6 முன்னாள் முதல்வர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். அதில் முக்கியமானவர் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி.
இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான தேவே கவுடாவின் மகன் ஆவார்.
இவரைப் போலவே ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தேசியத் தலைவரான ஜெயந்த் சவுத்ரி, மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இவர் நாட்டின் ஐந்தாவது பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கூடவே, முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சவுத்ரி அஜித் சிங்கின் மகன் இவர்.
இவர் முன்பு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியிலிருந்தார். அதன்பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரியில் பாஜக அரசு இவரது தாத்தாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்கியதை அடுத்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் என்டிஏ கூட்டணியில் இணைந்தார்.
இவரது ஆர்.எல்.டி கட்சி மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் வென்றது. அதாவது பாக்பத் மற்றும் பிஜ்னோர் ஆகிய இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. கணிசமாக 4,88,000 மற்றும் 37,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதவி செய்தது.
ஆக, குடும்ப அரசியலை ஒழிப்போம் என்று சூளுரை செய்திருந்த பாஜக, இவருக்குப் பதவி அளித்ததன் மூலம் குடும்ப அரசியலை ஏற்கும் கட்சியாக மாறியுள்ளது.
அடுத்ததாக ராம்விலாஸ் பாஸ்வான். இவர் பீகார் மாநில அரசியல் களத்தில் செல்வாக்கு மிக்க தலித் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவரது மறைவுக்குப் பின்னர் அவரது சிராக் பாஸ்வான் கட்சியை நடத்தி வருகிறார். அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள ஹாஜிபூர் தொகுதி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. அங்கே 1977 முதல் அக்கட்சி வென்று வருகிறது.
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிராக் பாஸ்வான் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது தந்தையின் வசம் இருந்த ஹாஜிபூர் தொகுதியில் 9 முறை கட்சியை வெற்றி பெற வைத்து சாதனைப் படைத்துள்ளார்.
இவரது வருகையால் என்.டி.ஏ கூட்டணியில் குடும்ப அரசியல் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இதே வாரிசு அரசியல்வாதிகளின் அமைச்சர் பட்டியலில் இணைந்துள்ளார் ராம் நாத் தாக்கூர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத ரத்னா விருது பெற்ற பீகாரின் புகழ்பெற்ற சோசலிஸ்ட் தலைவரும், முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூரின் மகன்.
இவரது தந்தைக்குப் பாரத ரத்னா வழங்கப்பட்ட போதே இதை வாக்கு வங்கியை மனதில் வைத்தே பாஜக வழங்கி உள்ளது என்றனர் எதிர்க்கட்சிகள்.
இந்தக் குடும்ப அரசியல் பட்டியலின் தொடர்ச்சியாக 1995ஆம் ஆண்டு காலிஸ்தானி தீவிரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ரவ்னீத் சிங் பிட்டு, மோடி அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ளார்.

முன்னதாக காங்கிரசிலிருந்த பிட்டு, லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு மாறினார். லூதியானாவில் போட்டியிட்டு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங்கிடம் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்கு வகித்த என்சிபி மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவின் மருமகள் ரக்ஷா கட்சே இந்த முறை மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தில் இளம் அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ஜிதின் பிரசாத். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய மந்திரி சபைக்குத் திரும்பியுள்ளார். இவர் 2021இல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இவரது தந்தை ஜிதேந்திர பிரசாத் துணைத் தலைவரான இருவர். 1991ல் ராஜீவ்காந்தி ஆட்சியிலும் அதன் பின்னர் 1994ல் பிவி நரசிம்மராவ் ஆட்சியிலும் பிரதமர்களின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவர்.












Click it and Unblock the Notifications