பாஜக ஆட்சியமைத்தாலும் மோடி பிரதமர் இல்லையா? ஆர்எஸ்எஸ் முடிவு என்ன? பரபரப்பை கிளப்பிய சு.சாமி
டெல்லி: பிரதமர் அலுவலகத்தில் இனி வேலையில்லை. இனி ஆர்எஸ்எஸ் விருப்பப்படியே எல்லாம் நடக்க போகிறது. மோடியை தவிர யார் தலைமையிலான ஆட்சி என்றாலும் அது சிறப்பாக தான் இருக்கும்'' என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனும் நிலையில் அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்றைய தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

மாறாக பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் 32 தொகுதிகளில் பாஜக குறைவாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடிக்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் ஆந்திராவில் 16 தொகுதிகளிலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதோடு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 சீட், கர்நாடகாவில் ஜேடிஎஸ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் தலா இரண்டு இடங்களில் வென்றன. இவர்களின் உதவியுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என கூறப்படுகிறது.
மறுபுறம் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 235 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் காங்கிரஸ் 99 சீட்டுகளை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் தான் பத்திரிகை ஒன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் மத்தியில் பெரும்பான்மை பெறாத பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். இந்தியாவில் ஜனநாயக ரீதியான ஆட்சியை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் வழங்கவில்லை. தோல்வி பயத்தால் தேவையில்லாத பல விஷயங்களை அவர் பிரசாரத்தில் பேசினார்.
பாஜகவை பொறுத்தவரை அடிநாதம் என்பது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவு போல் தான் பாஜக இருக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக நிலைமை மாறியது. ஆர்எஸ்எஸ் உழைப்பில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகள் மாறியுள்ளது. அடிப்படை சித்தாந்தங்களில் இருந்து விலகி விட்டனர்.
இதனை நான் பொதுவெளியில் விமர்சனம் செய்தேன். தவறுகளை திருத்த கூறினேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை. பாஜக சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு மோடி அதிர்ச்சி அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இனி வேலையில்லை. இனி ஆர்எஸ்எஸ் விருப்பப்படியே எல்லாம் நடக்க போகிறது. மோடியை தவிர யார் தலைமையிலான ஆட்சி என்றாலும் அது சிறப்பாக தான் இருக்கும். எந்த ஆட்சியில் எனது பங்கும் இருக்கும்'' என கூறியுள்ளார். இதனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தாலும் கூட பிரதமராக மோடி பொறுப்பேற்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications