"இரண்டே மாதம்.. மிக பெரிய பூதம் வெளியே வரும்!" வாக்கு திருட்டு புகாரில் ராகுல் காந்தி சொன்ன மேட்டர்
டெல்லி: வாக்கு திருட்டு புகார் தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே வாக்கு திருட்டு குறித்த தங்கள் குற்றச்சாட்டுகள் இத்தோடு முடியவில்லை என்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் இது தொடர்பான முழுமையாக ரிப்போர்ட்டை வெளியிடப் போகிறோம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நமது நாட்டில் தேர்தல்களில் வாக்கு திருட்டுகள் நடப்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சிறிய வீட்டில் பல வாக்காளர்கள் இருப்பதாகவும் ஒரே நபரின் பெயர் பல தொகுதிகளில் இருப்பதாகவும் ராகுல் காந்தி அப்போது குற்றஞ்சாட்டியிருந்தார். இது அப்போதே நாடு முழுக்க பேசுபொருளானது.

ராகுல் காந்தி
இதற்கிடையே இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். வாக்கு திருட்டு புகார்களில் தொடர்புடையவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் நேரடியாகப் பாதுகாப்பதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, சாப்ட்வேர் மூலம் காங்கிரஸ் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்படுவதாகவும் கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் வாக்கு திருட்டு தொடர்பாக நீதிமன்றக்களை நாடுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி சொன்ன பதிலே இங்குக் கவனிக்க வைத்துள்ளது. அதாவது வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்கள் இத்தோடு நிற்கப்போவதில்லை என்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் விரிவான ரிப்போர்ட் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2 மாதங்களில் ரிப்போர்ட்
ராகுல் காந்தி இது தொடர்பாக மேலும் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் இப்போது செய்வது என் வேலை அல்ல.. ஜனநாயகச் செயல்முறையில் பங்கேற்பது மட்டுமே எனது வேலை. ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பது எனது வேலை அல்ல.. அது நமது நாட்டில் உள்ள அமைப்புகளின் பொறுப்பு. ஆனால் அந்த அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யாததால், நானே அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனது டீம் இது குறித்து விரிவான ஆய்வை நடத்தி வருகிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் விரிவான ரிப்போர்ட்டை வெளியிடுவோம்.
வாக்கு திருட்டு
எங்கள் அறிக்கை வெளிவரும்போது, இந்தியாவில் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளது என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்காது.. மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் என அனைத்திலும் இந்த முறைகேடுகள் நடந்துள்ளது. இது இப்போது மட்டும் நடக்கவில்லை.. கடந்த 10-15 ஆண்டுகளாக இந்த தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.
மக்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்
இந்திய ஜனநாயகத்தைக் காலி செய்துவிட்டனர். அதை மீட்டெடுக்கும் பொறுப்பு இந்திய மக்களிடமே இருக்கிறது. வேறு எந்தவொரு தனிநபராலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. இந்தியாவின் எதிர்காலம் மக்களின் கைகளில் தான் உள்ளது. என்னைப் போன்ற தலைவர்கள் இங்கு வந்து உண்மைகளைச் சொல்ல மட்டுமே முடியும். ஆனால், களத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் சக்தி இந்திய மக்களுக்கே உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வாக்கு திருட்டு தொடர்பாகத் தங்களுக்குத் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஊழியர்களே உதவ ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் சீக்கிரமே வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications