மார்ச் 9ல் தேர்வு.. ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவிகள்.. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி மாணவிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: கர்நாடகாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஹிஜாப் வழக்கு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் நீதிபதி சுஷாந்து துலியா, கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பை தள்ளுபடி செய்தார். இரு நீதிபதிகளும் இரு தீர்ப்புகளை அளித்தனர். தொடர்ந்து, அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.

ஹிஜாப்புடன் அனுமதி கோரி வழக்கு
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ளது. இதனால் அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மாணவிகளில் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மாணவிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், மாணவிகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மாணவிகள் தரப்பு வாதம்
அதேபோல், தேர்வு எழுதவில்லை என்றால் மாணவிகளுக்கு ஒரு ஆண்டு வீணாகிவிடும். தற்போது மாணவிகள் தனியார் கல்லூரிகளில் மாறிவிட்ட போது, தேர்வுகள் அரசு கல்வி நிறுவனங்களில் தான் நடைபெறுகிறது. அதனால் அவர்களை தேர்வில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாணவிகளை தேர்வு எழுதவிடாமல் தடுப்பது யார்? என்று கேள்வி எழுப்பினர்.

தலைமை நீதிபதி உறுதி
அதற்கு பதிலளித்த மாணவிகள் தரப்பு வழக்கறிஞர், மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத விரும்புகின்றனர். அதனால் இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம் என்று தெரிவித்தார். இதனைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி சந்திரசூட், மனுவினை பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

கடந்த மாதம் விசாரணை
கடந்த மாதம் அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை பரிசீலித்து நான் விசாரணைக்கான தேதியை ஒதுக்குகிறேன். இது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் தன்மை கொண்டது. நீங்கள் பதிவாளரிடம் இதுபற்றி முறையிடுங்கள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications