எனது மிகப்பெரிய சொத்தே நேர்மை தான்.. விசாரணைக்கு கூப்பிடவில்லை.. பாஜகவின் நோக்கமே வேற.. கெஜ்ரிவால்
டெல்லி: என்னுடைய மிகப்பெரிய சொத்தே நேர்மைதான். என்னிடம் விசாரணை நடத்துவது பாஜகவின் நோக்கம் இல்லை. விசாரணை என சாக்கு போக்கு சொல்லி அழைத்து விட்டு பிறகு கைது செய்யவே விரும்புகிறார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவரது ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த புதுமான கொள்கையின் படி, 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில், ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதாவது, மதுபான கொள்கையில் இருந்த வரிக் குறைப்பு போன்ற முக்கிய சலுகைகள் குறித்த விபரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை சம்மன்: இதன் பின்னர் சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. அப்போது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்கள் நடந்தது, இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதையும் சிபிஐ குற்றம் சாட்டியது. தொடர்ந்து இந்த அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது.
இதையடுத்து இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்தூறை சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
உண்மை என்னவென்றால்: அப்போதும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாணைக்கு ஆஜர் ஆகவில்லை. அமலாக்கத்துறை சம்மனில்ல் தெளிவான விவரங்கள் இல்லை என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், விசாரணை என சாக்கு போக்கு சொல்லி அழைத்து விட்டு பிறகு கைது செய்யவே விரும்புகிறார்கள் என்று அமலாக்கத்துறை சம்மன் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-உண்மை என்னவென்றால் முறைகேடு என்பதே நடைபெறவில்லை. பாஜக என்னை கைது செய்ய நினைக்கிறது. எனது மிகப்பெரிய சொத்து என்னெவென்றால் எனது நேர்மைதான்.
பிரசாரம் செய்ய விடாமல்: அதை அவர்கள் ஒடுக்க முயற்சிக்கிறார்கள். எனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்ட விரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறினார்கள். என்னிடம் விசாரணை நடத்துவது என்பது பாஜகவின் நோக்கம் இல்லை. ஆனால், என்னை லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய விடாமல் முடக்குவதுதான் அவர்களின் நோக்கம். விசாரணை என்ற சாக்கு போக்கு சொல்லி என்னை அழைத்து விட்டு பிறகு கைது செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை அமலாக்கத்துறை ரெய்டு நடத்தக்கூடும் என்றும், சோதனைக்கு பிறகு கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் ஆம் ஆத்மியை சேர்ந்தவரும், அமைச்சருமான ஆதிஷி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications