நீங்க யாராச்சும் அத பாத்தீங்களா? குடியரசு தலைவர் மாளிகையில் சிறுத்தை? குமாரசாமி தலைக்கு மேல பாருங்க!
டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பதவி ஏற்றுக்கொண்டார். மத்திய அமைச்சராக குமாரசாமி பதவியேற்ற போது அவருக்கு பின்னால் குடியரசுத் தலைவர் மாளிகையில் புலி, சிறுத்தை போன்ற மர்ம விலங்கு ஒன்று நடமாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்றது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அடித்துக் கூறிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 293 தொகுதிகளில் வென்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கிய இந்தியா கூட்டணி கடும் போட்டி அளித்த நிலையில் சுமார் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தனி பெரும்பான்மை இல்லாத போதிலும் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார். நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.
குறிப்பாக பாஜக மூத்த தலைவர்களும் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே பி நட்டா உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
கூட்டணி ஆட்சி என்பதால் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனா, அப்னா தளம், இந்திய குடியரசு கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளுக்கு என 11 அமைச்சர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் சிறுத்தை அல்லது புலி போன்ற ஒரு உருவம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உலாவியது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஆன குமாரசாமிக்கு தலைவர் திரௌபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பிரமாண பத்திரத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை போன்ற ஒரு மர்ம விலங்கு நடந்து சென்றதும் தொடர்ந்து அதன் நிழலும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அது பூனையாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மர்ம விலங்கு எப்படி நடமாடியது எனவும் சர்ச்சை முளைத்துள்ளது.












Click it and Unblock the Notifications