'மோடியின் பிம்பம்' போலியானது.. ஆக்சிஜன் பற்றாக்குறை உண்மையான பிரச்சினை.. ராகுல் தாக்கு
டெல்லி : நாட்டில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பிரதமர் மோடியின் பிம்பத்தைப் போல இல்லாமல் உண்மையான பிரச்சினைகள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
மேலும், டெல்லி, பெங்களூரு என நாட்டிலுள்ள பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இன்று மட்டும் டெல்லியில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரு மருத்துவர் உள்ளிட்ட எட்டு பேர் பலியாகினர். இதேபோல ரெம்டெசிவிர் உள்ளிட்ட முக்கிய மருந்துகளுக்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு
தற்போதுள்ள சூழ்நிலையில், தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இன்று முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 6 மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்கள் தங்களிடம் கொரோனா தடுப்பூசி இல்லை என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன.

பிரதமரின் போலி பிம்பம்
இந்நிலையில், ராகுல் காந்தி நாட்டில் நிலவும் பிரச்சினைகள் பிரதமர் மோடியின் போலியான பிம்பத்தைப் போல இல்லாமல் அவை உண்மையானவை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் உண்மையானவை, பிரதமரின் பிம்பத்தைப் போல இல்லை" என விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பாடுள்ளதாக வெளியான செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ராகுல் விமர்சனம்
கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு சரியாகச் செயல்படவில்லை என ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மோடியின் நண்பர்களின் லாபத்திற்காகவே தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications