‛‛தமிழகத்துக்கு 5 புதிய மருத்துவ கல்லூரிகள்’’.. எந்தெந்த இடங்களில் தெரியுமா? மத்திய அரசு அனுமதி
டெல்லி: தமிழகத்தில் புதிய 5 மருத்துவ கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் புதிதாக 113 மருத்துவ கல்லூரிகள் தொடங்கய என்எம்சி எனும் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 22 மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது.
இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி வருகிறது.

இந்த தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்காத பட்சத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது. அதுமட்டுமின்றி மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவ படிப்புகளை அறிமுகம் செய்ய முடியாது. இந்நிலையில் தான் நாடு முழுவதும் புதிதாக 113 மருத்துவக்கல்லூரிகளை தொடங்க மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 22 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 14, ராஜஸ்தானில் 12, தெலுங்கானாவில் 11, மேற்கு வங்கத்தில் 8, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசத்தில் தலா 7 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் கர்நாடகா, தமிழ்நாட்டில் தலா 5 மருத்துவக்கல்லூரிகளும், உத்தரகாண்டில் 3, கேரளா, ஒடிசா, குஜராத் மாநிலங்களில் தலா 2 மருத்துவக்கல்லூரிகள், ஹரியானா, டெல்லி, அசாம், பஞ்சாப், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை அவனம்பட்டு, மற்றும் கன்னியாகுமரியில் தனியார் சார்பில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
தற்போது தமிழகத்தில் 5 புதிய மருத்துவ கல்லூரிகள் உள்பட 113 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. . இதன்மூலம் நம் நாட்டில் மொத்தம் 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இத்தகைய சூழலில் 113 கல்லூரிகள் புதிதாக தொடங்க உள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 800யை தாண்ட உள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகளால் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர உள்ளது.












Click it and Unblock the Notifications