நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்த பணி? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு.. எப்போது தொடங்கும்
டெல்லி: பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபரில் இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் கூறுகின்றன.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி வரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை (Bihar-ல்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும், பாஜகவிற்கு சாதகமாக இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கியது.
வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதார் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இது ஒருபக்கம் இருக்க, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. டெல்லியில் இன்று அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும், ஒரு மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், அதற்கு முன்பாகவே சிறப்பு தீவிர திருத்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications