60,000 கோடி பிசினஸ்..அடுத்த வருஷம் 1 லட்சம் கோடி! கோச்சிங் மாபியா கையில் என்டிஏ.. அதிர விட்ட சு.வெ.!
டெல்லி: நீட் என்பது தேர்வல்ல, அது ஒரு தொழில். இன்றைக்கு அதனுடைய சந்தை மதிப்பு 60 ஆயிரம் கோடி; இன்னும் சில வருடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி. கோச்சிங் மாபியாக்களின் புகழிடமாகத் தேசிய தேர்வு முகமை மாறியிருக்கிறது என நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்," நீதிபதியினுடைய அருவருப்பான சிந்தனையும், ஆளுங்கட்சியினுடைய அராஜகமான சிந்தனையும் இணைந்து உருவாக்கிய கரப்பான் பூச்சிகள் இந்த மசோதாக்கள் முழுவதும் பறந்து கொண்டிருக்கின்றன.

ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவு உலக இளைஞர்கள் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தைப் ரசித்து பார்த்து முடித்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, இந்திய இளைஞர்களும் மாணவர்களும் ஜந்தர் மந்தரிலே இருந்து தங்களது ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.
சு வெங்கடேசன்
மோடி - அமித்ஷாவுக்கு எதிரான அவர்களின் ஆட்டம் சாதாரண ஆட்டம் அல்ல. 12 ஆண்டு காலம் ட்ரம்பிடம் மட்டுமே மண்டியிட்ட மோடியை, முதல் முறையாக மாணவர்களிடம் மண்டியிட வைத்த பெருமை ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு உண்டு. வரலாற்றின் விசித்திரத்தைப் பார்த்தீர்களா பிரதமர் அவர்களே? "இந்த அவைக்கு வாருங்கள், நாட்டுக்குப் பதில் சொல்லுங்கள்" என்று எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கேட்டோம். அப்பொழுதெல்லாம் அவர் வரவில்லை. இன்றைக்கு என்ன ஆனது தெரியுமா? எட்டு வயது சிறுவர்கள் லட்சக்கணக்கான மீம்ஸ்களைப் போட்டுத் துளையிட்டு விட்டார்கள்.
பிரதமர் செல்பி வீடியோ
வேறு வழியில்லாமல் நள்ளிரவு 12 மணிக்குச் செல்பி வீடியோ போடுகிறார் பிரதமர். அதுமட்டுமல்ல, மற்ற அமைச்சர்களையும் பார்த்து, "நீங்களெல்லாம் ரீல்ஸ் போடக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லியிருக்கிறார். எவ்வளவு பெரிய வீழ்ச்சியை நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நடைபெற்ற போராட்டத்தினுடைய வீரியம், அவர்களினுடைய கோரிக்கையை விட, அவர்களின் தலைவர்களை விட மிகப்பெரியது. இன்னும் சொல்லப்போனால், இந்தப் போராட்டத்திற்கு முன்பு அவர்களின் கோரிக்கையும் தலைவர்களும் மிகச்சிறியவைதான்.
தர்மேந்திர பிரதான்
இன்னும் சொல்லப்போனால், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவும் மிகச்சிறியதுதான்; அவர் பிரதமரைக் காப்பாற்றியிருக்கிறார், அவ்வளவுதான். மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்வதாக அவர் சொல்கிறார். மே 3ஆம் தேதி வினாத்தாள் கசிந்தது; 83 நாட்கள் எங்கே போனார்? ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டிருக்கிறது. ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீட் தேர்வு
இவ்வளவு குற்றத்திற்கும் ஒருவர் கூட தண்டனை பெறவில்லை என்றால், அதற்கான சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், அந்த ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார். மன்னிப்பு என்ற சொல்லே இல்லாமல் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார். இது ஏமாற்று வேலை. இந்த மசோதாவைத் தாக்கல் செய்கிற பொழுது அமைச்சர் சொன்னார், "நீட் தேர்வை முறைகேடு இல்லாமல் நடத்துவதற்குத்தான் இந்த மசோதா" என்று. நாங்கள் கேட்க விரும்புகிற கேள்வி ஒன்றுதான்: "பாலிலே எறும்பு விழுந்தால் எடுத்துப் போட்டுட்டுக் குடிக்கலாம்; விஷத்திலே எறும்பு விழுந்தால் குடித்தால் என்ன? குடிக்கவில்லை என்றால் என்ன?" நீட் தேர்வே ஒரு முறைகேடுதான். அது முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.
என்.டி.ஏ
நீட் என்பது தேர்வல்ல, அது ஒரு தொழில். இன்றைக்கு அதனுடைய சந்தை மதிப்பு 60 ஆயிரம் கோடி; இன்னும் சில வருடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி. கோச்சிங் மாபியாக்களின் புகழிடமாகத் தேசிய தேர்வு முகமை மாறியிருக்கிறது. என்.டி.ஏ-வை (NTA) நீங்கள் உருவாக்கினீர்கள். 2024 சட்டத்தை நீங்கள் உருவாக்கினீர்கள். இப்பொழுது திருத்தச் சட்டத்தையும் நீங்கள்தான் கொண்டுவருகிறீர்கள். இவற்றை எல்லாம் உருவாக்கி என்ன பயன்?
வினாத்தாள் கசிவு
இப்பொழுது நடைபெற்ற வினாத்தாள் கசிவு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கேட்டார்கள்: "நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? கடந்த கால தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவே மாட்டீர்களா?" என்று. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கேட்ட அதே கேள்விகளை உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். வெறும் தண்டனை காலத்தை அதிகரித்து, தண்டத்தொகையை அதிகரித்து, விரைவு நீதிமன்றத்தை அமைத்தால் போதுமா? இந்தப் பிரச்சனை முடிந்துவிடுமா? 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் காலத்து வினாத்தாள் கசிவு வழக்கு இன்றைக்கு வரை நடந்து கொண்டிருக்கிறது.
காஷ்மீர் உரிமைப் பறிப்பு
போராடிய ஒவ்வொரு மாணவர்களையும் இந்த அவையிலிருந்து நெஞ்சாரப் பாராட்டுகிறோம். அதுமட்டுமல்ல, இந்தியாவின் கல்விச்சாலைகள் எல்லாவற்றையும் ஜந்தர் மந்தரோடு இணைத்த SFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் அனைத்தையும் இங்கே நாங்கள் பாராட்டுகின்றோம். நாங்கள் இந்த 12 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு எதிராக, NRC-க்கு எதிராகப் போராடினோம். அதேபோல CAA-வுக்கு எதிராகப் போராடினோம். SIR-க்கு எதிராகப் போராடினோம். காஷ்மீர் உரிமைப் பறிப்புக்கு எதிராகப் போராடினோம்.
அராஜகக் கொள்கை
விவசாய உரிமைப் பறிப்புக்கு எதிராகப் போராடினோம். அந்தப் போராட்டங்கள் எல்லாம் வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட நீடித்தது. ஆனால், வெறும் 39 நாளில் இந்தப் போராட்டத்தின் வெற்றியின் ருசியை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இது ஒரு அமைச்சரின் ராஜினாமா சம்பந்தப்பட்டது அல்ல; ஆளுங்கட்சியின் அராஜகக் கொள்கையின் தலையிலே இறக்கப்பட்ட இடி என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
