விவசாயிகள் புரட்சி போல நீட் எதிர்ப்பு போராட்டங்கள்- நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இடைவிடாமல் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாக மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்துகின்றனர். டெல்லியில் 18-வது லோக்சபா கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் பெருந்திரளான மாணவர் காங்கிரசார் நாடாளுமன்ற சாலைகளில் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியிலும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
நீட் தேர்வு முறைகேடுகள் மாணவர்களிடையே மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட், நெட் என மத்திய அரசின் தேசியத் தேர்வு முகமை நடத்தும் அத்தனை தேர்வுகளும் கண் துடைப்புக்கானவை; பல லட்சம் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுகிறவை என்பதை புரிந்து கொண்ட மாணவர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இடைவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்தான் நீட், நெட் என பொதுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. அங்கேயே நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானா, ஆந்திராவில் ரயில் மறியல் போராட்டங்களை மாணவர்கள் நடத்தினர். ஹைதராபாத்தில் மகளிர் காங்கிரஸாரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். தமிழ்நாட்டில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன. அரசு கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், பெற்றோருடன் தொடர்ச்சியாக போராடுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர். இதே டெல்லி எல்லைகளில்தான் ஓராண்டுக்கும் மேல் விவசாயிகள் கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் வதைத்த வெயிலிலும் போராடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்தனர். தற்போதைய டெல்லி ஜந்தர் மந்தர் களமும் அதையே வெளிப்படுத்துகின்றன.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்களில் ஒரு பகுதியில் நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர். நாடாளுமன்றம் நோக்கி செல்லும் சாலைகளில் நீட் எதிர்ப்பு பதாகைகளுடன் மாணவர்கள் அணி அணியாக முழக்கங்கள் எழுப்பி முன்னேறியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 18-வது லோக்சபா கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே போராட்டத்தையும் நாட்டின் நாடாளுமன்றம் எதிர்கொண்டது.












Click it and Unblock the Notifications