நீட் மறுதேர்வு விவகாரம்.. நாடாளுமன்ற குழு முன் இன்று ஆஜராகும் உயரதிகாரிகள்
டெல்லி: நீட் மறுதேர்வு தொடர்பான விவகாரம் நாடாளுமன்ற அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர்கள், தேசிய தேர்வு முகமை (NTA), தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் உயரதிகாரிகள் இன்று நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக உள்ளனர். வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற உள்ள மறுதேர்வு குறித்து விளக்கம் அளிக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது கண்டறியப்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய தேர்வில் முறைகேடு நடைபெற்றது பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மறு தேர்வையாவது முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, நீட் மறுதேர்வு தொடர்பாக சுகாதாரம், குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உயர்கல்வி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய தேர்வு முகமை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் நிலைக்குழு முன்பாக உயர் அதிகாரிகள் இன்று ஆஜராக உள்ளனர்.
"வினாத்தாள் கசிவு" (Paper Leak) என்றால் என்ன என்பதையும், அத்தகைய சம்பவங்கள் ஏதேனும் நடந்துள்ளனவா என்பதையும் தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளது. திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, மகளிர், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை தொடர்பான நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் ஆஜராக உள்ளனர். இந்தக் குழு முன்பாக கடந்த வாரம் தேசிய தேர்வுமுகமை அதிகாரிகள் ஆஜர் ஆகினர்.
அப்போது, நீட் இளநிலை 2024 தேர்வில் எந்தவித வினாத்தாள் கசிவும் ஏற்படவில்லை என்றும், உண்மையான வினாத்தாள் கசிந்ததாக அல்லாமல், "கெஸ் பேப்பர்" (Guess Paper) எனப்படும் கணிப்பு வினாக்கள் மட்டுமே முன்கூட்டியே பரவியதாக அதிகாரிகள் விளக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய தேர்வு முகமையின் பணியாளர் எண்ணிக்கை, 2022-க்கு பிறகு செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகள், உயர்கல்வித் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு அறிக்கைகள் மற்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு வழங்கிய 101 பரிந்துரைகளில் எத்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களையும் கோரியுள்ளது.
சிபிஎஸ்இயின் ஆன்லைன் மதிப்பீட்டு (OSM) முறையையும் நாடாளுமன்றக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. ஒஎஸ்எம் ஒப்பந்தத்திற்காக வெளியிடப்பட்ட தொடர்ச்சியான டெண்டர் அறிவிப்புகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இயிடம் கேட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications