“இவ்வளவு ஆணவம் பிடித்த, பொய் பேசும் ஒரு தேர்தல் ஆணையரை இதுவரை பார்த்ததில்லை” - மம்தா பானர்ஜி ஆவேசம்
டெல்லி: "நான் டெல்லி அரசியலில் நெடுங்காலம் பயணித்திருக்கிறேன். இவ்வளவு ஆணவம் பிடித்த, பொய் பேசும் ஒரு தேர்தல் ஆணையரை நான் இதுவரை பார்த்ததில்லை." என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இறப்பு, இடப்பெயர்வு, கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் என மொத்தம் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதில் உயிரோடு இருக்கும் பலரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்து முறையிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதற்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று, தேர்தல் ஆணையம் இறந்ததாக தெரிவித்த 50 பேருடன் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் டெல்லி அரசியலில் நெடுங்காலம் பயணித்திருக்கிறேன். நான்கு முறை மத்திய அமைச்சராகவும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். ஆனால், இவ்வளவு ஆணவம் பிடித்த, பொய் பேசும் ஒரு தேர்தல் ஆணையரை நான் இதுவரை பார்த்ததில்லை.
யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரம் அல்ல என்பதால், நான் உங்கள் பதவியை மதிக்கிறேன் என்றும், ஒரு நாள் நீங்களும் மாறத்தான் வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்தேன்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக தேர்தல் ஆணையரைச் சந்திக்கும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, "உயிரோடு இருக்கும் பலர் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு பெயர் நீக்கப்பட்ட பலர் இங்கு வந்துள்ளனர். அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்காகவே இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாங்கள் வரும்போது டெல்லி பயப்படுகிறது. நாங்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கான மக்களை இங்கே கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், சிறப்பு தீவிர திருத்தத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 50 பேரை நாங்கள் இங்கே அழைத்து வந்துள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
டெல்லி போலீஸ் யாரையும் பாதுகாக்க முடியாது. டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தபோது டெல்லி காவல்துறை எங்கே சென்றது? நாங்கள் அவர்களை விமர்சிக்க மாட்டோம். ஏனெனில் அது அவர்களின் தவறு அல்ல. டெல்லி காவல்துறையினர் அடங்கிய ஒரு பேருந்து இங்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையருடன் நாங்கள் சந்திப்பு நடத்த வந்துள்ளோம். முறையாக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். டெல்லி காவல்துறையால் யாரையும் பாதுகாக்க முடியாது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications