“நாங்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்..” கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
டெல்லி: ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் கேரளச் செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை மறுநாள் அதாவது ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு இந்த விவகாரத்தில் எடுத்துள்ள முயற்சிகளை விளக்கியது. அதை ஏற்ற நீதிபதிகள், சில முக்கிய கருத்துகளை தெரிவித்தனர்.
பொதுவாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காக அதிகளவில் செல்வார்கள். அதிலும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இதுபோல வேலைக்காகச் செல்வார்கள். கேரளாவில் இருந்தே பலரும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வார்கள். அங்குப் பெரும்பாலானோருக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படுவதில்லை. ஆனால், சிலருக்கு அங்கு மிக மோசமான சம்பவங்கள் நடக்கிறது.

நிமிஷா பிரியா
அப்படிக் கடந்த 2008ல் ஏமன் நாட்டிற்குச் சென்றவர் நிமிஷா பிரியா. அங்கு ஆரம்பத்தில் அவருக்கு எல்லாம் நன்றாகவே போய் கொண்டு இருந்தது. இடையில் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்ததால் அவரது கணவரும் குழந்தையும் இந்தியா திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததால் ஏமனில் இருந்த நிமிஷா பிரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்தார். இதனால் அவர் சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
அந்நாட்டுச் சட்டப்படி ஏமன் நாட்டினர் மட்டுமே சொந்தமாக கிளினிக்கை தொடங்க முடியும். இதனால் மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக்கை ஆரம்பித்தார். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே நிமிஷா பிரியா போட்டோவை மார்பிங் செய்த மஹ்தி, இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதனால் கிளினிக் வருமானம் எல்லாம் தனக்குத் தான் சொந்தம் என்றும் மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
கொலை வழக்கு
இதனால் அதிர்ச்சி அடைந்த நிமிஷா பிரியா எவ்வளவோ பேசியும் மஹ்தி கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டையும் மஹ்தி பிடுங்கி வைத்துக் கொண்டான். இதனால் என்ன செய்வதென்றே நிமிஷா பிரியாவுக்கு புரியவில்லை. அங்கிருந்த முன்னாள் ஜெயில் வார்டன் ஒருவர் மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட் எடுத்துவிடுமாறு ஐடியா கொடுத்துள்ளார். அதைக் கேட்டு நிமிஷா பிரியா மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆனால், அதன் டோஸ் அதிகமாகப் போகவே மஹ்தி உயிரிழந்தான்.
மரண தண்டனை
இந்தச் சம்பவம் 2017ல் நடந்தது. அப்போது ஏமன் நாட்டில் இருந்து தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டில் ஏமன் உள்ளூர் நீதிமன்றம் பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் மேல்முறையீடு தொடங்கி எல்லாச் சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்திவிட்டார். ஆனால், அங்கு நிமிஷா பிரியாவுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இம்மாதத் தொடக்கத்தில் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்
இதற்கிடையே கேரள செவிலியர் நிமிஷா பிரியா தூக்குத் தண்டனையை நிறுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு தலையிட்டு செவிலியரின் தூக்குத் தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து நிமிஷா பிரியா தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், "சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த எல்லை வரை செல்ல முடியுமோ அந்த எல்லை வரை சென்று முயன்றது. மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடியுமா என்று அங்குள்ள வழக்கறிஞரிடம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை. ஏமன் அரசுக்கு எதுவும் முக்கியமில்லை.
முயன்றோம் முடியவில்லை
செல்வாக்கு மிக்க ஷேக் ஒருவரை வைத்து கூட முயற்சி செய்தோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை. மரண தண்டனை தள்ளி வைக்கப்படும் என்று இடையில் ஒரு தகவல் வந்தது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. வரையறுக்கப்பட்ட எல்லைக்கு மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது" என்றார்.
சுப்ரீம் கோர்ட்
அப்போது நீதிபதிகள் நஷ்ட ஈடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதை கவுரவ பிரச்சினையாக பார்ப்பதால் பணம் ஏற்க மறுப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், "ஆமாம், அங்கு எதுவும் நடப்பதாக தெரியவில்லை.. இந்த விவகாரத்தால் நம்மால் எதுவும் சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் கேட்கவும் மாட்டார்கள்" என்றார்.
இன்று காலை கூட மரண தண்டனையை நிறுத்த மத்திய அரசு சார்பில் செய்தி அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அரசு எடுத்துள்ள முயற்சிகளை குறித்துக்கொண்ட நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். அப்போது ஏமனில் என்ன நிலை என்பதை விளக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications