’இந்தியா’வுக்கே விதை போட்ட நிதிஷ்..2018லேயே மோடிக்கு சந்திரபாபு ஸ்கெட்ச்! என்ன இப்படி நடந்துருக்கு?
டெல்லி: மக்களவைத் தேர்தலில் இறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவோடு ஆட்சியமைக்க போகிறது பாஜக. கடந்த காலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்க்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் தான் இந்த சந்திரபாபு, இந்தியா கூட்டணிக்கே அச்சாரம் போட்டவர் தான் நிதிஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் வியூகங்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய நிகழ்வுகள் என பரபரப்பை சந்தித்து வந்த இந்திய அரசியல் களம் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவைக்கு 543 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் கூடி இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக 240 தொகுதிகளுக்கு மேல் வந்திருக்கிறது.
மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் நரேந்திர மோட. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணியும் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குடியரசு தலைவரை சந்தித்து இதற்காக உரிமை கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இரு கூட்டணியுமே ஆட்சி அமைக்கும் முனைப்பில் செயல்பட்டு வரும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க தொடங்கியிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு அங்குள்ள முக்கிய தலைவர்களை சந்தித்தார். உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறுமா என்ற எதிர்பார்ப்புக்கு இடையே இந்த தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில் அடுத்து வரும் தலைவர்தான் இந்தியாவை வழி நடத்துவார் என்பதால் உலகம் முழுவதும் இந்த தேர்தல் கவனம் பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் கூட்டணி ஆட்சியை கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முனைப்பு காட்டி வரும் நிலையில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு பல வகைகளில் நெருக்கடி அளித்திருக்கின்றனர். கடந்த 2014 தேர்தலில் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில் 2019 தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்தவர் தான் சந்திரபாபு நாயுடு.
மாநிலம் பிரிப்பின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியோடு மாநில பிரிவினை நடைபெற்றது. அதற்குப் பிறகு தெலுங்கானா பல்வேறு வகைகளில் முன்னேறிவிட்ட நிலையில் ஆந்திராவுக்கு எந்த உதவியும் மத்திய அரசு செய்யவில்லை என குற்றம் சாட்டினார் சந்திரபாபு நாயுடு. இதை அடுத்து இந்தியாவில் இருக்கும் அனைத்து எதிர்கட்சிகளையும் சந்தித்த அவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக சந்தித்த நம்பிக்கை இல்லா தீர்மானம் அது. அந்த தீர்மானம் தோல்வியை சந்தித்தபோதும் இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை முதல் முதலாக ஒருங்கிணைத்த பெருமை சந்திரபாபு நாயுடுவையே சேரும்.
அதற்குப் பிறகாக நிதீஷ் குமார் பாஜகவோடு பலமுறை கூட்டணி அமைத்தும் கூட்டணியில் இருந்து வெளியேறியும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அவரது அணி தாவல் இருந்தது. இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை பாஜக காங்கிரஸ் என மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார். இதனால் பலமுறை அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இப்போது இருக்கும் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார் தான். திரிணாமுல் - கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி - காங்கிரஸ் தொடங்கி அந்தந்த மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருந்தவர்களை ஒருங்கிணைத்து புதிய கூட்டணி அமைய காரணமாய் இருந்த நிதீஷ்குமார் தற்போது பாஜக பக்கம் இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவும் அவரோடு கை கொடுத்திருக்கிறார். இவர்கள் இருவரின் ஆதரவில் தான் பாஜக இப்போது ஆட்சி அமைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications