நான்தான் மதுரை 293 ஆவது ஆதீனம்.. மறைந்த அருணகிரிநாதர் கைலாசாவின் மகா சன்னிதானம்.. நித்தி அட்ராசிட்டி
டெல்லி: 13 நாட்கள் துக்கம் அனுசரிப்பு முடிந்தவுடன் அருணகிரி நாதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என நித்யானந்தா அறிவித்துள்ளார்.
மதுரை 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரி நாதர் (77) கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து நேற்றைய தினம் அவர் காலமானார்.
இந்த நிலையில் முன்பு எப்போதோ ஒரு முறை அருணகிரி நாதரால் நித்தியானந்தா பட்டம் சூட்டப்பட்டார். இந்த நிலையில் அருணகிரி நாதர் இறந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293 ஆவது குருமகா சன்னிதானமாக தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா.

மதுரை ஆதீனம்
கைலாசா நாட்டில் உட்கார்ந்து கொண்டு மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்துக் கொள்ளும் நித்தியானந்தாவின் அலப்பறை தாங்க முடியவில்லை. ஏற்கெனவே கைலாசா, கரென்சி, பாஸ்போர்ட், கொரோனாவால் தனிமை, கைலாசாவில் தொழில் தொடங்க வாய்ப்பு... அப்படி இப்படின்னு காமெடி செய்தவர் நித்தியானந்தார்.

அறிவிப்புகள் என்ன
தற்போது அவர் ஒட்டுமொத்த கைலாசா மக்களுக்கும் (!) அவர் விடுத்திருக்கும் அறிவிப்புகளை பார்க்கலாம். 292 ஆவது ஆதீனம் அருணகிரி நாதரின் மறைவுக்கு ஒட்டுமொத்த கைலாசாவும் இரங்கல் தெரிவிக்கிறது. நாடு தழுவிய துக்கமாக இது அனுசரிக்கப்படும். இந்து நாட்டின் அதிபராக மறைவு செய்திக்கு வருந்துகிறேன்.

ஆதீனம் இளவரசர்
2012 ஆம் ஆண்டு மதுரை ஆதீன இளவரசராக அருணகிரி நாதர் எனக்கு பட்டம் சூட்டினார். அருணகிரி நாதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக கைலாசா கொடி அரை கம்பத்தில் பறக்கும். கைலாசா பார்லிமெண்ட் மற்றும் அனைத்து அரசு அலுவலகத்திலும் கொடி அரை கம்பத்தில் பறக்கும். 13 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும்.

கைலாசாவாசிகள்
உலகம் முழுவதும் உள்ள கைலாசாவாசிகள் இதை கடைப்பிடிக்க வேண்டும். கைலாசா தூதரகம் மற்றும் பொது இடங்களில் அருணகிரிநாதருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அடுத்த 13 நாட்களுக்கு அனைத்து கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கொண்டாட்டங்கள் இன்றி பூஜைகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அடுத்த தகவல்
அதிபரிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும். அருணகிரி நாதர் பெயரில் ஆதிசைவ பல்கலைக்கழகம் திறக்க கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் பல்கலைக்கழகம் கட்டி முடிக்கப்பட வேண்டும். கைலாசாவின் ஆன்மீக முறைப்படி அருணதிரி நாதருக்கு சிறப்பு ருத்ராபிஷேகம் , மகேஸ்வர பூஜைகள் நடைபெற வேண்டும்.

13 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
13 நாட்கள் துக்கம் அனுசரிப்பு முடிந்த பிறகு அருணகிரிநாதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும். கைலாசாவின் மகா சன்னிதானமாக அருணகிரி நாதரை அறிவிக்க ஆன்மீகத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அருணகிரி நாதர் நினைவாக கைலாசவாசிகள் அன்னதானம், பசுதானம், தங்கம், வெள்ளி தானம் வழங்க வேண்டும். அருணகிரி நாதரின் அடக்கம் முடியும் வரை கைலாசாவாசிகள் விரதம் இருக்க வேண்டும். சிறுவர்களுக்கு விரதத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

கைலாசாவின் 10111 விதிகள்
கைலாசாவின் 10111 விதிகளை மதித்து நாட்டு மக்கள் அனைவரும் இந்த அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும். இந்த அறிவிப்புகளை அனைத்தையும் கைலாசாவின் ஆன்மிகத் துறை கண்காணிக்கும். அதிபரின் இந்த அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீனம் பொறுப்பை பெற இந்தியாவுக்கு வந்தால் போலீஸார் கைது செய்வர் என்பதால் கைலாசாவில் இருந்து கொண்டே கைப்பற்ற முயற்சிப்பார் என தெரிகிறது.

கைலாசா இருப்பதே சந்தேகம்
கைலாசா என்ற ஒரு நாடு இருக்கிறதா என்பதே சந்தேகம். அதிலும் கைலாசாவாகிளுக்கு என அறிவித்துள்ளார் நித்தியானந்தா. பாலியல் புகாரில் சிக்கிய இவரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறே என்ற விவேக் காமெடி போல் மக்களே இல்லாத ஒரு நாட்டிற்கு இவர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கொரோனா வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதை முன்பே அறிந்துதான் நான் கைலாசாவில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னை பைத்தியம் என்றார்கள். இன்று பாருங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசே அறிவுறுத்துகிறது. எனவே நான் ஒரு தீர்க்கதரிசி என நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தி
இது போல் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டுக்கான கரென்சியையும் நோட்டுகளையும் வெளியிட்டிருந்தார். மேலும் 400 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வெளியிட்டிருந்தார். மேலும் இந்து மதத்தை பின்பற்றும் நாடுகள் மட்டுமே தங்கள் நாட்டுடன் வணிகம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார். மேலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை மாவட்ட மக்கள் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். இதையடுத்து பரோட்டா கடை, துணிக் கடைக்காரர் என நித்தியானந்தாவிடம் கைலாசாவில் தொழில் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். அக்மார்க் சிரிப்புக்கு பெயர் பெற்ற இவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையில் மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார். பதிலுக்கு மறைந்த அருணகிரி நாதருக்கு கைலாசாவின் சன்னிதானமாக அறிவித்துள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது ட்வீட்டை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications