"முஸ்லீம்களுக்கு எந்த உதவியையும் செய்ய போவதில்லை!" பாஜக கூட்டணியில் உள்ள ஜேடியு எம்பி சர்ச்சை பேச்சு
டெல்லி: லோக்சபா தேர்தலில் இஸ்லாமியர்களுக்கும் யாதவ சமூகத்தினரும் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற பீகார் ஜேடியு எம்பி தேவேஷ் சந்திர தாக்கூர், இதனால் அந்த சமூகத்தினர் தன்னிடம் எந்தவொரு உதவிக்காகவும் வரக் கூடாது என்றும் அவர்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்ய போவதில்லை என்றும் கூறியுள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பீகார் மாநில சட்ட மேலவையின் முன்னாள் தலைவரான 71 வயதான தேவேஷ் சந்திர தாக்கூர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சீதாமர்ஹி தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தத் தொகுதியில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இறுதியில் தேவேஷ் சந்திர தாக்கூர் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதற்கிடையே அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேவேஷ் சந்திர தாக்கூர் தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் யாதவ இன மக்களுக்காக எந்தவொரு வேலையையும் செய்யப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
தேவேஷ் சந்திர தாக்கூர்: இது தொடர்பாக அவர் பேசுகையில், "சூரிஸ் (மீனவ சமூகம்) மற்றும் கல்வார் சமூகத்தில் இருந்தும் எனக்கு யாரும் வாக்களிக்கவில்லை. குஷ்வாஹாக்கள் கூட என்னைக் கைவிட்டனர். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பல இடங்களில் குஷ்வாஹாக்களுக்கு சீட் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. என்னைத் தவிர குஷ்வாஹா சமூகத்தினருக்கு யாரால் உதவி செய்ய முடியும்.
யாதவர்களும் முஸ்லிம்களும் என்னிடம் இருந்து எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது என்று நான் ஏற்கனவே அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவர்கள் என்னை அழைத்தால் அவர்களுக்கான மரியாதையைத் தருவேன்.. டீ, ஸ்நாக்ஸ் கூட தருவேன். ஆனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு நான் உதவப் போவது இல்லை.
உதவ முடியாது: சமீபத்தில் கூட முஸ்லீம் ஒருவர் ஒரு உதவிக்காக என்னிடம் வந்திருந்தார். இதற்கு முன்பு இங்கு வராமல் இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் எனக் கேட்டேன். மேலும், ஆர்ஜேடி-க்கு(பீகார் எதிர்க்கட்சி) வாக்களித்தீர்கள் என்றால் நான் டீ குடித்து விட்டுக் கிளம்புங்கள்.. உங்களுக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்.
எனது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் எனக்கு வாக்களிக்காதபோது நான் ஏன் உங்களுக்காக உதவ வேண்டும் என அவரிடம் கேட்டேன். அவர் தேர்தலில் தவறான எனக்கு வாக்களிக்கவில்லையே என்ற சோகத்துடன் திரும்பினார்" என்றார்.
சர்ச்சை: தேவேஷ் சந்திர தாக்கூரின் இந்த பேச்சு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எம்பியாக தேர்வாகும் ஒருவர் அனைவருக்குத்தானவராக இருக்க வேண்டும்.. அப்படி இல்லாமல் குறிப்பிட்ட பிரிவினருக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை என்று எம்பி ஒருவர் சொல்வதை ஏற்க முடியாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் இந்த வீடியோ தொடர்பாக தேவேஷ் சந்திர தாக்கூர் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
விமர்சனம்: இதற்கிடையே தேவேஷ் சந்திர தாக்கூரின் பேச்சுக்கு ஆர்ஜேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்ஜேடி தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், "எம்பி, எம்எல்ஏ, அவ்வளவு ஏன் பிரதமராக பதவியில் இருப்பவரும் குறிப்பிட்ட ஜாதி அல்லது குறிப்பிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அவர் மக்கள் பிரதிநிதியாக மாறுகிறார்.
தேவேஷ் சந்திர தாக்கூர், இப்போது சீதாமரியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அந்த தொகுதியில் உள்ள அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும்.. மேலும் ஜாதி மற்றும் சமூகத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களுக்காக அவர் பாடுபட வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications