பைக்கில் பாலோ செய்த இளைஞர்கள்.. அலட்சியம் செய்த போலீஸ்..பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி குற்றச்சாட்டு
டெல்லி: தலைநகர் டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் காரணமே இன்றி தன்னை பைக்கில் பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்தியதாகவு பிரபல கிரிக்கெட் வீரரான நிதிஷ் ராணாவின் மனைவி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் நிதிஷ் ராணா. இவரது மனைவி சாச்சி மர்வா. இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது காரில் பணிகளை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு இளைஞர்கள் அவரை காரில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

அதோடு, காரில் மோதுவது போல வந்துள்ளனர். அந்த இரண்டு பேரும் தங்கள் பைக்கில் தொடர்ந்து காரை துரத்தியபடி வந்ததால், தனது செல்போனில் நடந்த நிகழ்வுகளை சாச்சி மர்மா படம் பிடித்தார். பின்னர் தனக்கு இரவு நேரத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசாரும் இதை கண்டுகொள்ளவில்லை என்று குற்றமும் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாச்சி மர்வா கூறியிருப்பதாவது:- டெல்லியில் வழக்கம் போல் எனது பணிகளை முடித்துக் கொண்டு நான் வீடு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது எனது காரை பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் எனது காரை தாக்க தொடங்கினர். எந்த ஒரு காரணமும் இன்றி இப்படி அந்த இரு இளைஞர்களும் என்னை துரத்தினர்.
இது குறித்து நான் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் கூறினேன். ஆனால், போலீசாரோ, நீங்கள் தற்போது பாதுகாப்பாக வீட்டிற்கு போய் விட்டீர்கள்..எனவே அதை விட்டு விடுங்கள்... அடுத்த முறை வாகன எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. அடுத்த முறை நான் அவர்களின் தொலைபேசி எண்ணையும் எடுத்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

பிரபலமான கிரிக்கெட் வீரரின் மனைவி அளித்த புகாரை கூட பெறாமல் போலீசார் இப்படி அலட்சியமாக நடந்து கொண்டு இருந்தால் சாதரண பெண்களுக்கு எப்படிப்பட்ட பதில் கிடைக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் ராணாவின் மனைவி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனிடையே, கிரிக்கெட் வீரர் ராணாவின் மனைவியை பின் தொடர்ந்து துன்புறுத்தியது தொடர்பாக ஒருவரை கைது செய்து இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். மேலும் இன்னொரு நபரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இரவு 8 மணியளவில் காரில் சென்ற பெண்ணை இளைஞர்கள் துரத்தி சென்று இடையூறு செய்தது, டெல்லியில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் இருப்பதாகவும் போலீசார் இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு இதுபோன்ற அத்துமீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications