"மல்லிகார்ஜூன கார்கே'தான் பிரதமர் வேட்பாளர்- 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் மமதா, கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பரிந்துரைத்தனர்.
லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்க "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சித் பரூக் அப்துல்லா, இடதுசாரித் தலைவர்கள் டி ராஜா, சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட மொத்தம் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்காக இப்போதே இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. அத்துடன் டிசம்பர் 31-ந் தேதிக்குள் "இந்தியா" கூட்டணி கட்சிகள் தங்களிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துவிட வேண்டும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
மேலும் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. மல்லிகார்ஜூன கார்கே ஒரு தலித் என்பதால் தலித் பிரதமர் வேட்பாளர் என்ற முழக்கத்தை முன்வைக்க முடியும் எனவும் மமதாவும் கெஜ்ரிவாலும் வலியுறுத்தினர்.
#WATCH | When asked about West Bengal CM and TMC leader Mamata Banerjee's suggestion at the INDIA Alliance meeting, MDMK (Marumalarchi Dravida Munnetra Kazhagam) MP Vaiko says, "There was no opposition to that suggestion - Mallikarjun Kharge for PM face." pic.twitter.com/yf6FmHdoyh
— ANI (@ANI) December 19, 2023
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பியும் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. யாரும் இதனை எதிர்க்கவில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.
இருந்தபோதும் தாம் ஒருபோதும் பிரதமர் வேட்பாளர் இல்லை என மல்லிகார்ஜூன கார்கே மறுத்துவிட்டார். அத்துடன், லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பின்னரே பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்; முதலில் தேர்தலில் வெல்வதுதான் நமது இலக்கு எனவும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் வெளிப்படையாகவே மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications