நீட் வினாத்தாள் கசிவு.. சும்மா விட மாட்டோம்..! லோக்சபாவில் ஆவேசமாக சொன்ன பிரதமர் மோடி
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று பேசினார். பிரதமர் மோடி பேசும் போது, நீட் வினாத்தாள் கசியவிட்டவர்களை தப்ப விட மாட்டோம் என்றும் இந்த விவகாரத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி தமது பேச்சின் தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது சிலருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ச்சியான பொய்களை பரப்பியவர்களுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது என்று பேசினார். மோடி பேச தொடங்கியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எனினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மோடியின் உரை நீடித்தது. இன்று மாலை 4.10 மணிக்கு பேச தொடங்கிய மோடி மாலை 6. 10 மணியை தாண்டியும் பேசினார்.
அப்போது நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசினார். மோடி கூறியதாவது:- நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசியவிட்டவர்களை தப்ப விட மாட்டோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தில் குற்றம் இழைத்தவர்கள் ஒரு காலமும் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பல சர்ச்சைகள் எழுந்தன. ஒரே தேர்வு மையத்தில் எழுதிய 7 பேர் முதலிடம், 718, 719 மதிப்பெண்கள் எடுத்தது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, நீட் மறு தேர்வு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என பல சர்ச்சைகள் எழுந்தன. மேலும் இது தொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் தான் எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்ககோரி வலியுறுத்தி வந்தது. ராகுல் காந்தியும் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வந்தார். இந்த நிலையில் தான் இன்று லோக்சபாவில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications