‛ஸ்கெட்ச்’.. 4 பேர் இல்லை 6 பேர்! லோக்சபா ‛ஸ்பிரே’ தாக்குதலுக்கு திட்டமிட்டது எப்படி? திடுக் தகவல்
டெல்லி: டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு வளையங்களை மீறி நுழைந்த 4 பேர் ஸ்பிரே அடித்து கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 4 பேர் இல்லை. மொத்தம் 6 பேர் என்பதும், அவர்கள் குர்கிராமில் தங்கி திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இரு சபைகளும் தொடங்கின. இந்த வேளையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் லோக்சபாவின் அரங்குக்குள் குதித்தனர்.
அவர்கள் மஞ்சள்நிற ஸ்பிரே அடித்தனர். ஒருவர் எம்பிக்களின் மேஜை மீது ஏறி சபாநாயகர் இருக்கை நோக்கி ஓடினார். இதையடுத்து எம்பிக்கள் அவர்களை பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் ஒரு பெண், ஒரு ஆண் ஸ்பிரே அடித்து கோஷமிட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 4 பேரிடமும் டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையை சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நாடாளுமன்றத்தில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்தவர்கள் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பதும், நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்தது ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பதும் தெரியவந்தது. இதில் நீலம் சிவில் சர்வீஸ் நுழைவு தேர்வுக்கு தயாராகி வருவது தெரியவந்தது. மனோ ரஞ்சன் பெங்களூரில் உள்ள விவேகானந்த் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை படித்திருப்பது தெரியவந்தது.
மேலும் நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்த 2 பேரில் ஒருவருக்கு மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதி எம்பி பிரதாப் சிம்ஹா பெயரில் பாஸ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் இந்த ஸ்பிரே தாக்குதலில் ஈடுபட்டது 4 பேர் இல்லை. மொத்தம் 6 பேர் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 2 பேர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, 2 பேர் நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் 2 பேர் தலைமைறவாகி உள்ளனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இவர்கள் நாடாளுமன்றத்தி ஸ்பிரே தாக்குதல் நடத்துவதற்காக குர்கிராமில் உள்ள லலித் ஷா என்பவரின் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கிருந்து திட்டமிட்டு டெல்லிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும் இவர்களின் பின்னணியில் வேறு ஏதேனும் அமைப்பு இருக்கலாம் எனவும், அந்த அமைப்பின் வழிக்காட்டுதலில் அவர்கள் பாதுகாப்பு அரண்களை உடைத்து நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ஸ்பிரே தாக்குதல் நடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது கைதான 4 பேரும் நாங்கள் தாமாகவே நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும், தங்களுக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தனிப்படை அமைத்து போலீசார் கைதான 2 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications