வாட்ஸ்அப்பில் வந்த வீடியோகால்! எடுத்ததுமே ஓடிய ஆபாசபடம்.. அலறிய மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் தனது வாட்ஸ்அப்பில் வந்த வீடியோ காலை ‛அட்டென்' செய்த நிலையில் அதில் ஆபாசபடம் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பிரகலாத் சிங் படேல். இவர் அங்குள்ள தாமோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பிரகலாத் சிங் படேல் இடம்பெற்றுள்ளார்.

இவர் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல் சக்தி துறையின் மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரகலாத் சிங் படேல் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகலாத் சிங் படேலுக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் வந்தது. இதையடுத்து அவர் வீடியோ காலை ஏற்று பேச முயன்றார். அப்போது எதிர்முனையில் ஆபாசவீடியோ ஓடியது. இதனை பார்த்து பிரகலாத் சிங் படேல் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்த போன்கால் செய்யப்பட்டுள்ளதை அவர் உணர்ந்தார். உடனடியாக அவர் வீடியோகால் இணைப்பை துண்டித்தார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து தனது தனி செயலாளர் அலோக்மோகன் மூலம் டெல்லி போலீசில் புகார் செய்தார். டெல்லி சைபர்க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்டமாக வாட்ஸ்அப்பில் கால் வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த முகமது வகீல் மற்றும் முகமது சாகிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சபீர் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இவர்கள் 3 பேரும் செல்வாக்கு உள்ள நபர்கள், பணக்காரர்களை குறிவைத்து ஆபாச வீடியோவை பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறுகையில், ‛‛ நான் மத்திய பிரதேசத்துக்கு சென்றபோது இந்த போன் எனக்கு வந்தது. இதுபற்றி உடனடியாக போலீசில் புகார் செய்தேன். விசாரணைக்கு தேவையான விபரங்களை அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications