உயர்ஜாதி ஏழைகள்.. 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீடு செல்லுமா? இல்லையா? நவ.,7ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர் ஜாதி ஏழைகளுக்கு பொருளாதார ரீதியாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு தேதியை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுமா? இல்லையா? என்பது பற்றி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்தியாவில் சாதி வாரியான இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்த சாதி வாரியான இடஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டு வருகிறது.
அதாவது மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும், மக்கள் முன்னேற்றம் மற்றும் மாநில அரசுகளின் விருப்பத்தின் பேரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

10 சதவீத இடஒதுக்கீடு
இந்நிலையில் தான் சமீபத்தில் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகள் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசியலமைப்பு சாசனத்தின் 103வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் மற்றொரு தரப்பு வரவேற்பு தெரிவித்தது. இதனால் இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்கிடையே தான் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், திரிவேதி, பரித்வாலா அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர். அப்போது, ‛‛ பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவது என்பது சரியாக இருக்காது. சாதி பிரிவினையை களையவும், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதாரத்தை காரணம் காட்டி வழங்க முடியாது'' என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மத்திய அரசு வாதம்
அதேபோல் மத்திய அரசு சார்பில், ‛‛இடஒதுக்கீடு என்பது ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்பதற்கானது தான். முன்னேறிய வகுப்பினரில் பலரும் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளன. இவர்களுக்கானது தான் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு'' என்பன போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

நவம்பர் 7ல் தீர்ப்பு
இந்நிலையில் தான் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7 (நாளை மறுநாள்) வெளியாக உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், திரிவேதி, பரித்வாலா அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் நவம்பர் 8 ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications