ஆன்லைனில் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த இந்திய வீரர்.. இப்ப மனைவிக்கு கனவிலும் நடக்காத சம்பவம்
டெல்லி: பாகிஸ்தானியர்களை வெளியேற வேண்டும் என்று அதிரடியான முடிவை எடுத்துள்ளதால், பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மத்திய அரசு உத்தரவுப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டு, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கி வருகிறார்கள். ஆனால், இந்தியாவை விட்டு போக விரும்பதாவர்கள் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் அரசாங்கம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், இளம் தம்பதியினர் பிரிந்து செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவார்.. இந்த துப்பாக்கிசூடு சம்பவம் உலகையே உலுக்கிவிட்டது.. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
தாக்குதல்கள் - நடவடிக்கைகள்
இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அதை போராக கருதுவோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
போர் மூளும் அபாயம்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசாக்களை ரத்து செய்து, உடனடியாக அவர்கள் வெளியேறவும் உத்தரவிட்டு, அதற்கான காலக்கெவும் நிர்ணயிக்கப்பட்டது.
அந்தவகையில் சார்க் விசா வைத்திருந்தவர்களுக்கு கடந்த மாதம் 26-ந் தேதியும், மருத்துவ விசா வைத்திருந்தவர்கள் 29-ந் தேதியும், சுற்றுலா, புனித யாத்திரை உள்பட மேலும் 12 பிரிவினர் 27-ந் தேதிக்குள்ளேயும் வெளியேற உத்தரவிடப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற தொடங்கினார்கள். இதுவரை 786 பேர் வெளியேறி விட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ஆன்லைனில் திருமணம்
இந்தநிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் இளைஞருக்கு ஆன்லைனில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.. மத்திய ரிசர்வ் காவல்துறை வீரர் (CRPF) முனிர் கான் காஷ்மீரில் வசித்து வருகிறார்.
இவர் பாகிஸ்தானில் வசிக்கும் மினால் கான் என்பவரை, கடந்த வருடம் ஆன்லைனிலேயே நிக்கா செய்துள்ளார்.. ஆனால், இப்போது பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், மினால் கானும், காஷ்மீரை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது..
கண்ணீர் வலியுறுத்தல்
ஜம்முவிலிருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு செல்ல அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.. கரோட்டாவில் தனது கணவர் முனீர் கான் மற்றும் குழந்தைகளுடன் மினல் கான் வாழ்ந்து வந்த நிலையில், ஜம்முவிலிருந்து வாகா எல்லைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் தன்னுடைய கணவரை மீண்டும் எப்போது சந்திக்க போகிறேனோ தெரியவில்லை என்று கண்ணீருடன் சொல்கிறார் மினால் கான்.. கணவன் மற்றும் குழந்தைகளிடம் இருந்து தன்னை பிரிக்க வேண்டாம் அரசாங்கத்தை எவ்வளவோ வலியுறுத்தினார்..
அதுமட்டுமல்ல, தாக்குதலில் அப்பாவிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், அதுக்காக எங்களை ஏன் பிரிக்க வேண்டும்" என்று அழுதுகொண்டே கேட்டிருந்தார். எனினும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் 72 வயது பெண்மணி
இப்படித்தான் அசாம் பெண்ணும் கண்ணீர் வடித்திருந்தார்.. ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் அந்த பெண்ணுக்கு 72 வயதாகிறது.. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பிறகு பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்தபோது, இந்த பெண்மணி பிறந்துள்ளார். எனவே, இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராகவே கருதப்படுகிறார்.
தற்போது, பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு சொல்லவும், இந்த பெண்மணி அதிர்ச்சி அடைந்துவிட்டார். 4 வயது முதல் 72 வயது வரை இந்தியாவில் தான் வளர்ந்துள்ளார்.. இங்குதான் திருமணம் செய்து 2 மகன்களுடனும் வாழ்ந்து வருகிறார்.
சுட்டுத்தள்ளுங்க
68 வருடம் இந்தியாவிலேயே வாழ்ந்து, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, முதியோர் ஓய்வூதிய அட்டையையும் பெற்றுள்ளார்.. இப்போது திடீரென வெளியேற சொன்னால் எப்படி போவது? என்று கேட்கிறார். அதுமட்டுமல்ல, உடம்பு சரியில்லாமல் இங்குதான் சிகிச்சையும் எடுத்து வருகிறார்.
"இதுவரை பாகிஸ்தானுக்கு நான் போனதே இல்லை.. இந்த வயசில நான் ஏன் அங்கே போகணும்? நாங்கள் எதாவது தப்பு செய்திருந்தால், அரசாங்கம் எங்களை துப்பாக்கியால் சுடட்டும். அதுக்காக நாட்டை விட்டு எங்களை வெளியேற்றிடாதீங்க" என்று கண்ணீர் மல்க கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications