18+ தடுப்பூசி.. 6 மாநிலங்களில் மட்டும் தொடக்கம் - ஆரம்பமே சறுக்கல்!
டெல்லி: 18 வயது மேற்பட்டோருக்கு மே 1 முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களே இந்த இயக்கத்தை துவங்கியுள்ளன.
இந்தியாவில் வீசி வரும் கொரோனா 2வது அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையான சிகிச்சையின்றி மரணம், ஆக்சிஜன் இன்றி மரணம், ரெமிடிசிவிர் மருந்து கிடைக்காமல் மரணம் என்று ஒவ்வொரு பாணியில் உயிர்களை காவு வாங்கி வருகிறது
ஆக்சிஜன், ரெமிடிசிவிர் என்பதைத் தாண்டி கொரோனா தடுப்பூசி தான் இந்தியாவின் உடனடி தேவை என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது.

ஸ்டாக் இல்லை
மே.1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக கோவின் தளத்தில் பலரும் ரெஜிஸ்டர் செய்து காத்திருக்க, பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசி ஸ்டாக் இல்லை தடாலடியாக அறிவித்தன. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வமாக இருந்த இளைஞர்களுக்கு இது அதிர்ச்சி செய்தியாக அமைந்தது.

தடுப்பூசி இயக்கம் நிறுத்தம்
கேரளா, பஞ்சாப், குஜராத், உத்தரகண்ட், ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசி இல்லை என்று கூறியுள்ளன. மிக மோசமான கோவிட் -19 பாதிக்கப்பட்ட மும்பையில், போதிய அளவு தடுப்பூசி இல்லாததால், ஏப்ரல் 30, முதல் 2021 மே 2 வரை மூன்று நாட்களுக்கு முழுமையாக தடுப்பூசி இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

எங்கும் கூட வேண்டாம்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், "நாளை தடுப்பூசி போடுவதற்காக யாரும் வரிசைக்கட்டி நிற்க வேண்டாம். எங்களுக்கு தடுப்பூசி ஸ்டாக் கிடைத்தவுடன் சொல்கிறோம், அதன் பிறகு வந்து செலுத்திக் கொண்டால் போதும். அடுத்த சில நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி மையங்களில் எவரும் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாடு முழுவதும் பலர் தடுப்பூசிகளுக்கு பதிவு செய்துள்ளனர், ஆனால் எங்களுக்கு இன்னும் அதற்கேற்ற ஸ்டாக் கிடைக்கவில்லை" என்றார்.

மூன்று மாவட்டங்களில் மட்டும்
உத்தரபிரதேசத்தில், 75 மாவட்டங்களில் 7 இடங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி லக்னோ, கான்பூர், பிரயாகராஜ், வாரணாசி, கோரக்பூர், மீரட் மற்றும் பரேலி ஆகிய இடங்களில் மட்டுமே போடப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் அஜ்மீர், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே தடுப்பூசி பணிகள் தொடங்குகிறது. குஜராத்தில் 33 மாவட்டங்களில் 10 இடங்களில் மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது

மே 5 முதல்
ஒடிசா மாநிலம், நேற்று மாலை 1.5 லட்சம் டோஸ் கோவாக்சின் பெற்றதால், இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அசாம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இயக்கத்தை இன்று முதல் தொடங்காது என்பதை உறுதிப்படுத்தியது. மேற்கு வங்கம் தடுப்பூசி இயக்கத்தை மே 5 முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications