மதுரை எய்ம்ஸ்-க்கு ரூ.1,977 கோடி தேவை.. இதுவரை ரூ.12.35 கோடியே ஒதுக்கீடு.. ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி!
டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆர்டிஐ தகவல் மூலமாக தெரிய வந்துள்ளது. அதேபோல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்றும் தெரிய வந்துள்ளது.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டதால், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடிக்கல் நாட்டிய சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஒற்றை செங்கலை கடந்து இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

எய்ம்ஸ் மாணவர்கள்
அதுமட்டுமல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு இதுவரை யாரிடமும் பதில் இல்லை. இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாததால், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் கூட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கூட மதுரை எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலுடன் பிரச்சாரம் செய்தார்.

ரூ.12.35 கோடி ஒதுக்கீடு
இருப்பினும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமலே இருந்தது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

எப்போது பணிகள் நிறைவு?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக ரூ.1,977.8 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்ற கேள்விக்கு, 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள், தாங்கள் படித்த கல்லூரியையே பார்க்காமல் பட்டம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications