“வடகிழக்கு இருக்கட்டும்.. மணிப்பூர் குறித்து பேசுங்க!” ஜனாதிபதி உரைக்கு எதிராக முழக்கம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் இன்று உரையாற்றினார். வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவர் பேசியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர், மணிப்பூர் என முழக்கமிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பாஜகவினர் முழங்கியிருந்த நிலையில், அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது.

நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவர் பேசியபோது எதிரக்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் மணிப்பூர் என்று முழக்கமிட்டனர்.
கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பேசியதாவது, "60 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை.
பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டில் தொலைநோக்குடன் கூடிய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்று, போர் போன்ற சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் உறுதிமொழி இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இது சாத்தியமானது.
இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது. 2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. விவசாயம், தொழில்நுட்படம், சேவை துறைக்கு இந்த அரசால் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு நம் நாடு தீர்வு காணும் என்று உலக அரங்கில் நம்பப்படுகிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4 மடங்குக்கு மேல் நிதியை உயர்த்தியுள்ளது. அனைத்து வகையான இணைப்புகளும் வடகிழக்கு வரை நீட்டிக்கப்படுகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் பேசியிருந்தார்.
அப்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் குறித்து பேச வேண்டும் என மணிப்பூர், மணிப்பூர் என முழக்கமிட்டனர். ஆனால் கடைசி வரை குடியரசுத் தலைவர் தனது உரையில் மணிப்பூர் என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications