ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர் இடம்பெற முடியுமா? வக்பு வாரிய திருத்த மசோதா: காங் கேள்வி
டெல்லி: வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இன்று மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும், மற்ற மதத்தின் நம்பிக்கைகளையும் அரசு மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி வேணுகோபால் கூறினார்.
நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி இருக்கின்றனர். இந்த நிலம்தான் வக்பு வாரிய சொத்துகள் ஆகும். இந்த சொத்துக்களுக்காக கடந்த 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. 1958-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன.

வக்பு வாரியங்கள் மசூதிகள் - மதரஸாக்கள், தர்காக்களை நிர்வகிக்கும் நிர்வாக முறைகளைக் கண்காணிக்கும். இந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும். வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான விரிவான சட்டம் கடந்த 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திலும் 2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இதன் அடிப்படையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், மசோதாவை இன்று மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவில் வக்பு நிலங்களை கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். வக்பு நிலமா இல்லையா? என்பதை மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்யும்.
வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன் சம்பந்தப்பட்டோருக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும். வக்பு வாரியங்களில் மகளிர், பிற மதங்களை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வழிவகை செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்பி வேணுகோபால் கூறுகையில், "அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு இந்த மசோதாவை பாஜக கொண்டு வருகிறது.
வக்பு வாரிய சட்ட திருத்தமானது, மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல். மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளையும் அரசு மதிக்க வேண்டும். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்கள் இடம் பெற முடியும் என்று யாராவது நினைத்து பார்க்க முடியுமா? இவ்வாறு காங்கிரஸ் எம்பி வேணுகோபால் கூறினார்.












Click it and Unblock the Notifications