ராம நவமி வன்முறை.. கண்டித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு.. கடும் பதிலடி கொடுத்த இந்தியா!
டெல்லி: ராமநவமியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறி இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு கடுமையாக கண்டித்தது. இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு (OIC) 'வகுப்பு மனப்பான்மை' மற்றும் 'இந்திய எதிர்ப்பு' மனநிலையுடன் இருப்பதையே இந்த அறிக்கை காட்டுவதாக இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த ராம நவமி கொண்டாட்டங்களின் போது நாட்டின் சில மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த வன்முறை சம்பவம் அதிகம் காணப்பட்டன.
குறிப்பாக, பீகார் மாநிலத்தின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதிகளில் கோரமான மோதல்கள் நடைபெற்றது. இதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் தொடர் ரோந்து பணிகளிலும், கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இஸ்லாமிய கூட்டமைப்பு
இந்நிலையில் ராம நவமி ஊர்வலங்களின் போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகம் குறிவைக்கப்பட்டதாக இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) செயலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், " ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநிலங்களில் 'முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி' செயல்கள் நடந்துள்ளது. குறிப்பாக பீகாரில் உள்ள மதரசா மற்றும் நூலகம் கடந்த மார்ச் 31 அன்று எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கண்டிக்கிறோம்
இது போன்ற 'ஆத்திரமூட்டும் வன்முறை மற்றும் காழ்ப்புணர்வின் செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.இது போன்ற சம்பவங்கள், அதிகரித்து வரும் 'இஸ்லாமிய வெறுப்பு' மற்றும் இந்தியாவில் முஸ்லீம் சமூகத்தின் மீது அமைப்புரீதியாக இலக்கு வைப்பதன் தெளிவான வெளிப்பாடாக பார்க்கிறோம்.

அறிக்கை வெளியீடு
இதுபோன்ற செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும் இந்திய அதிகாரிகளை இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கு எதிரானது
இதற்கு இந்தியா கடுமையான எதிர்வினையை ஆற்றியிருக்கிறது. OIC வெளியிட்ட அறிக்கைக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரிந்ததம் பாக்சி வெளியிட்ட செய்தியில், "இந்தியா தொடர்பாக OIC செயலகம் இன்று வெளியிட்ட அறிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அவர்களின் வகுப்புவாத மனப்பான்மை மற்றும் இந்தியாவுக்கு எதிரான செயல்திட்டத்திற்கு மேலும் ஒரு உதாரணம். இந்தியா-விரோத சக்திகளால் தொடர்ந்து கையாளப்படுவதன் மூலம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ( OIC) அதன் நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications