"ஆக்ஸ்போர்ட்டில் இந்துஃபோபியா.. " நிகழ்ச்சி ரத்தால் புலம்பும் தள்ளும் தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்!
டெல்லி: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநரின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். காஷ்மீரில் இருக்கும் இந்து பண்டித்துகள் மீது நடத்தப்பட்ட படுகொலை குறித்த படம் என இது விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்தத் திரைப்படத்தைப் பார்க்க பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் வரி விலக்கு தொடங்கி விடுமுறை வரை அளித்தன. இருப்பினும், எதிர்த்தரப்பு இது குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் உள்ளதாகச் சாடியது.

காஷ்மீர் பைல்ஸ்
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கூட இந்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நன்கு ஓடிவிட்டது. சர்வதேச அரங்கிலும் இத்திரைப்படம் பேசுபொருளானது. சிங்கப்பூர் இத்திரைப்படத்தையே திரையிட மறுத்துவிட்டது. இருந்த போதிலும், இத்திரைப்படம் தொடர்பாக உலகெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அவற்றில் அத்திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கலந்து கொண்டு, தனது திரைப்படம் குறித்துப் பேசி வருகிறார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
அப்படியொரு நிகழ்ச்சி தான் இன்று (மே 31) பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்தது. இருப்பினும், எதோ தவறு நடந்துவிட்டதாகக் கூறி நிகழ்ச்சி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பு தனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் அவர் சாடியுள்ளார்.

பாகிஸ்தானியர்
இகு குறித்து அவர் தனது ட்விட்டரில், "இந்துபோபிக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு இந்து குரல் முடக்கப்பட்டு உள்ளது. எனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்கள். உண்மையில், அவர்கள் இந்து இனப்படுகொலை மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையினரான இந்து மாணவர்களின் குரலை முடக்கி உள்ளனர். இங்குள்ள மாணவர் [சங்கத்தின்] தலைவர் ஒரு பாகிஸ்தானியர். மிகவும் கடினமான இந்த போராட்டத்தில் எனக்கு ஆதரவு அளியுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

நிகழ்ச்சி ரத்து
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நிகழ்ச்சி தொடர்பான அனைத்து தகவல்களும் மெயிலில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பு, அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு எதோ தவறு நடந்துவிட்டதாகக் கூறினார்கள். ஒரே நேரத்திற்கு இருவரை புக் செய்துவிட்டதாகச் சொன்னார்கள். எனவே, எனது நிகழ்ச்சியை இன்று நடைபெற முடியாது என்றார்கள்.

இந்து குரல்
மேலும், என்னிடம் கூட கேட்காமல், அவர்கள் நிகழ்ச்சியை ஜூலை 1க்கு மாற்றினார்கள். அன்றைய தினம் நிகழ்ச்சியை நடத்துவதே வேஸ்ட். ஏனென்றால் அன்றைய தினம் மாணவர்கள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். நான் இஸ்லாமிய வெறுப்பு கொண்டவன் என்று அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான காஷ்மீரி இந்துக்களைக் கொல்வது இந்து வெறுப்பு இல்லை. ஆனால் அது தொடர்பான உண்மையைப் படம் எடுப்பது இஸ்லாமிய வெறுப்பு எனச் சொல்கிறார்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இதேபோலத் தான் நடந்தது. அங்குக் கடைசி நிமிடத்தில் வந்து எனது பேச்சை ரெக்கார்ட் செய்ய முடியாது என்றார்கள். இது கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாகும். ஒரு சில பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரி முஸ்லிம் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இது நடந்தது. நான் பிரதமர் மோடியை ஆதரிப்பதால் என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் அவதூறாக எழுதுகின்றனர்.












Click it and Unblock the Notifications