ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. விரைவில் இந்தியாவில் மீண்டும் மனித சோதனை.. சீரம் நம்பிக்கை!
டெல்லி: ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கி உள்ள கொரோனா வேக்சின் மீதான மனித சோதனை இந்தியாவில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்த மனித சோதனையை மீண்டும் தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலை. - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் மீதான மனித சோதனை மீண்டும் தொடங்கி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்த மருந்தின் மூன்றாம் கட்ட மனித சோதனை பிரிட்டனில் மீண்டும் தொடங்கி உள்ளது.
பக்க விளைவு காரணமாக பிரிட்டனில் சோதனை நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் சோதனை தொடங்கி உள்ளது. இன்னும் மூன்று நாடுகளில் இதன் மீதான மனித சோதனை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நிறுத்தம்
ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கி உள்ள கொரோனா வேக்சினை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம்தான் இந்தியாவில் இந்த வேக்சின் மனித சோதனை செய்யப்பட்டு வருகிறது. 1000 க்கும் அதிகமான நபர்களிடம் மூன்றாம் கட்ட சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்து எடுத்துக்கொண்ட நபர் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தால் வேக்சினின் மனித சோதனை நிறுத்தப்பட்டது.

மனித சோதனை நிறுத்தப்பட்டது
இந்த AZD1222 வேக்சின் எடுத்துக்கொண்ட ஒருவருக்கு விளக்க முடியாத பக்க விளைவுகள் ஏற்பட்டது. அதாவது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் நரம்பில் சின்ன சின்ன பிரச்சனை வந்தது. ஆனால் சீரம் நிறுவனம், AZD1222 வேக்சினின் மனித சோதனையை நிறுத்த போவதில்லை என்று அறிவித்தது. ஒருவருக்கு மட்டுமே பக்க விளைவு வந்துள்ளது. அதனால் சோதனையை நிறுத்த போவதில்லை என்று சீரம் நிறுவனம் அறிவித்தது.

ஆனால் என்ன
ஆனால் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மருந்தின் மனித சோதனையை நிறுத்தும்படி உத்தரவிட்டது. மருந்தின் சோதனையை இப்போது செய்ய வேண்டாம். பாதுகாப்பை உறுதி செய்த பின் சோதனை செய்யலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில்தான் தற்போது பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலை. - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் மீதான மனித சோதனை மீண்டும் தொடங்கி உள்ளது. மருந்து பாதுகாப்பாக உள்ளது . அதனால் மருந்தின் சோதனையை தொடரலாம் என்று பிரிட்டன் அறிவித்தது.

இந்தியா வரும்
இதனால் AZD1222 வேக்சினின் மனித சோதனை இந்தியாவில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. AZD1222 வேக்சினின் மனித சோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்க ஆலோசனை செய்து வருகிறது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தவுடன் சோதனை தொடங்கும் என்று சீரம் அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து வேக்சினை உருவாக்கி வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications