கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்பனை.. ஆலைகளை அரசே நடத்த கோர்ட் உத்தரவு
டெல்லி: கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தலைநகரில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அரசே எடுத்து நடத்துமாறு டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின் அதிகரிப்பால் படுக்கை வசதிகள் இன்றி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றி தலைநகரே தள்ளாட்டத்தில் உள்ளது.
மேலும் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சுடுகாடுகளில் எரிக்க இடமில்லாமல் சடலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் முறையாக ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு அனுப்புவதில்லை என புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜனை விற்று வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள மகாராஜா ஆக்ராசென் மற்றும் மகா துர்கா சாரிட்டபிள் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் சேத் ஏர் எனும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் முறையாக ஆக்ஸிஜனை சப்ளை செய்வதில்லை என நீதிமன்றத்தில் முறையிட்டன.
இந்த சேத் ஏர் எனும் நிறுவனத்தில் 20 மில்லியன் டன் ஆக்ஸிஜனை சப்ளை செய்யும் திறன் இருக்கும் போதிலும் வெறும் 2.4 மில்லியன் டன் மட்டுமே சப்ளை செய்கிறது. இந்த நிறுவனம் மீதமுள்ள ஆக்ஸிஜனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக குற்றம்சாட்டின.
இதற்கான ஆதாரங்களும் டெல்லி கோர்ட்டில் முன்வைக்கப்பட்டன. எனவே முக்கிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அதன் ஊழியர்களை கொண்டு அரசே எடுத்து நடத்த உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நடத்தாவிட்டால் அந்த நிலையங்களை மத்திய அரசு எடுத்து நடத்த நாங்கள் உத்தரவிடுவோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
