அப்பட்டமான முதலாளித்துவ உரை.. ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை.. ப. சிதம்பரம் சரமாரி விமர்சனம்
டெல்லி: முதலாளிகளுக்கு சாதகமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அப்பட்டமான முதலாளித்துவ உரையாகவே பட்ஜெட் உரை இருந்தது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்தார். 90 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். உணவு பொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) 2.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலமான வருவாய்க்கு 30% வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12%-ல் இருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பட்ஜெட்டில் வரி சலுகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அவர்களுக்கான அறிவிப்புகள் இதில் எதுவும் இடம்பெறவில்லை ஏழை, எளிய மக்கள் நலனுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வு காணும் அறிவிப்பு இல்லை.

ப. சிதம்பரம்
மத்திய பட்ஜெட்டில் 2 முறை ஏழைகள் என குறிப்பிட்டு ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி. நகரங்களில் வேலையின்மை 8.2%; கிராமங்களில் 5.8% ஆக இருக்கிறது. நாட்டின் முன் உள்ள சவால்களை மத்திய நிதி அமைச்சர் அறிந்திருப்பது அவசியம்.பட்ஜெட்டில் வருமான வரி சலுகையும் இல்லை. அதேபோல் ஜிஎஸ்டி சலுகையும் இல்லை.

முதலாளித்துவ உரை
முதலாளிகளுக்கு சாதகமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பட்டமான முதலாளித்துவ உரையாகவே பட்ஜெட் உரை இருந்தது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு முதலாளித்துவ பட்ஜெட்டை பார்த்தது இல்லை. நாட்டின் பொது மக்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த விதமான கவனமும் செலுத்தப்படவில்லை. மக்கள் இது போன்ற பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
Recommended Video

25 வருஷமா?
25 வருடங்களுக்கான பட்ஜெட் இது என்கிறார். ஆனால் அவர்கள் நிகழ் காலத்தை பற்றி எதுவும் சொல்லாமல்விட்டுவிட்டனர் . 25 ஆண்டுகால திட்டத்தின் பயன்களுக்காக மக்கள் காத்திருக்க வேண்டும் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் நிகழ்காலம் பற்றி எதுவுமே இல்லை, என்று காங்கிரஸ் மூத்த எம்பி ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications