இஸ்லாமியர்களுக்கு பட்ஜெட்டில் 15% ஒதுக்கீடா? பாஜக அறிக்கையை கொஞ்சம் பாருங்க.. ப.சிதம்பரம் விமர்சனம்
டெல்லி: இஸ்லாமியர்களுக்கு பட்ஜெட்டில் 15% ஒதுக்க காங்கிரஸ் முயன்றதாக பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்தியா டு டே பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மறுப்பு தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதனை மேற்கோள் காட்டி பிரதமருக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
மும்பையில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, "பட்ஜெட்டில் இஸ்லாமியர்களுக்கு 15% ஒதுக்க காங்கிரஸ் விரும்பியது. நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் வெளிப்படையாக கூறியது. இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய கூட்டத்தில் நான் இருந்தேன். அப்போது என்னுடைய ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.

இந்தியா கூட்டணியும் காங்கிரஸும் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது. கர்நாடகா இந்த அரசியல் ஆய்வின், ஆய்வுக்கூடம்" என்று விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு இந்தியா டு டே பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி பாஜவுக்கும் மோடிக்கும் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது, "பட்ஜெட்டில் 15 சதவீதத்தை இஸ்லாமியர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியதாக பிரதமர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். ஆனால், ராஜ்தீப் சர்தேசாய் உண்மையைக் வெளிகொண்டு வந்த பிறகு, பிரதமரும் பாஜக தலைவர்களும் முற்றிலும் அமைதியாகிவிட்டனர்.
காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தின் போது கடந்த 2013-14 ஆம் ஆண்டிற்கான சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் (யுபிஏ) பட்ஜெட்டில் அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், 'முடிந்த இடங்களில்', சிறுபான்மையினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 சதவிகிதம் செலவழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் எங்கும் இஸ்லாமியர்கள்/முஸ்லிம்கள் என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.
அதேபோல 2016-17ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்டிஏ (NDA) ஆட்சியிலும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இதேபோன்ற அறிக்கை எந்த மாறுதலும் இன்றி வெளியிடப்பட்டிருந்தது.
ஆக, சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் மிகச் சாதாரணமான இந்த அறிக்கை, எப்படி 'இஸ்லாமியர்களுக்கான பட்ஜெட்டாக' மாறியது?
பிரதமர் வெளிப்படையாக, ஒரு சாதாரண அறிக்கையை எடுத்து, அதைத் திரித்திருக்கிறார். ஆனால் NDA ஆட்சியின் கீழ் வந்த பட்ஜெட்டிலும் இதே அறிக்கைதான் வந்தது என்று யாருமே அவரிடம் சொல்லாததுதான் சிறப்பான தரமான சம்பவம். ராஜ்தீப் சர்தேசாய் பொய்யை அம்பலப்படுத்திய பிறகு, ஒட்டுமொத்த வலதுசாரி அமைப்பும் அமைதியாகிவிட்டது" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.
இதனையடுத்து ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி 4ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
மே 20ம் தேதி பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிஷா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் பிரதமரின் தேர்தல் பரப்புரை பேச்சுக்கள் தொடர்ந்து சலசலப்பை கிளப்பி வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலலை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications