டெல்லியில் தவிக்கும் பாகிஸ்தானியர்.. குழந்தைகளுக்கு இதய நோய்.. “வெளியேற்றாதீங்க” - கண்ணீர் கோரிக்கை!
டெல்லி: தமது குழந்தைகளின் இதய நோய்க்காக டெல்லிக்கு சிகிச்சைக்கு வந்த தந்தையின் கண்ணீர் கோரிக்கை அனைவரையும் கலங்க வைத்துள்ளது. குழந்தைகளின் முக்கியமான மருத்துவ சிகிச்சையை முடிக்கும் வரை தனது குடும்பத்தினர் நாட்டில் தங்க அனுமதிக்குமாறு இந்திய அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர்.
"எனது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் உள்ளது. அவர்களின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்தோம். ஏற்கனவே சுமார் ரூ.1 கோடி வரை செலவாகியுள்ளது. அடுத்த வாரம் அறுவை சிகிச்சை நடக்க உள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலால் எங்களை உடனடியாக பாகிஸ்தான் திரும்பச் சொல்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்" என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.

பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய அரசு கடுமையான முடிவுகளை எடுத்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றுவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தியாவில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியர்கள்
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மருத்துவ சுற்றுலாவில் வந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், பாகிஸ்தானியர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கண்ணீர் கோரிக்கை
இந்நிலையில், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தமது குழந்தைகளுக்கு சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அரசுக்கு கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார். சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர், தமது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி வந்துள்ளார். விரைவில் அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் சார்க் விசா சலுகைகளை ரத்து செய்துள்ளதால் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
"எனது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் உள்ளது. அவர்களின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்தோம். இங்குதான் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வசதி உள்ளது ஏற்கனவே சுமார் ரூ.1 கோடி வரை செலவாகியுள்ளது. அடுத்த வாரம் அறுவை சிகிச்சை உள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலால் எங்களை உடனடியாக பாகிஸ்தான் திரும்பச் சொல்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்" என கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார்.
அப்பாவிகளை பழி தீர்க்கும் பயங்கரவாதம்
அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையும், மருத்துவர்களும் குடும்பத்தினருடன் ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால் அவர்களை உடனடியாக டெல்லியை விட்டு வெளியேறுமாறு காவல்துறை மற்றும் வெளியுறவுத்துறை அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளதாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் என்றைக்கும் அப்பாவி மக்களைப் பழி தீர்ப்பதாகவே இருக்கிறது. எதற்கும் தீர்வற்ற பயங்கரவாதம் மானுட குலத்துக்கு எதிரானது என்பதையே இந்தத் தந்தையின் கண்ணீர் சொல்கிறது.












Click it and Unblock the Notifications