பான் 2.0 ஓகே.. அப்போ பழைய பான் கார்டுகள் வேலை செய்யாதா? புதிய பான் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி
டெல்லி: மத்திய அரசு இப்போது பான் 2.0 என்ற புதிய திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு புதிய வசதிகளைக் கொண்டு பான் கார்ட் வழங்கப்படும். அதேநேரம் இந்த அறிவிப்பு வெளியானது முதலே மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு இப்போது அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க முயன்று வருகிறது. டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் செலவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்க முடியும்.

அதன்படி இப்போது மத்திய அரசு பான் கார்டுகளை முழுக்க முழுக்க டிஜிட்டல் மாயமாக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று கூடிய நிலையில், புதிய பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ரூ.1,435 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே மக்களிடையே இந்த புதிய பான் 2.0 திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அந்த கேள்விகளுக்கான பதிலை நாம் பார்க்கலாம்.
க்யூ.ஆர் கோட் உடன் வரும் "பான் 2.0.." யாரெல்லாம் அப்ளை செய்ய வேண்டும்! இதற்கான கட்டணம் எவ்வளவு
உங்களிடம் இப்போது இருக்கும் பான் கார்ட் செல்லாததா?
அப்படி எல்லாம் இல்லை.. யாரும் உங்கள் பான் நம்பர் அல்லது பான் கார்ட்டை மாற்ற தேவையில்லை என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். உங்கள் பான் கார்ட் வழக்கம் போல செல்லுபடியாகும். தற்போதுள்ள பான் கார்டுகள் புதிய சிஸ்டத்தில் சிக்கலின்றி ஒருங்கிணைக்கப்படும்.
மக்களுக்கு புதிய பான் கார்டு கிடைக்குமா?
ஆம்.. தற்போது பான் கார்ட் வைத்திருப்போருக்குக் கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பான் கார்ட் கிடைக்கும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.
மேம்படுத்தப்பட்ட பான் கார்ட்டில் உள்ள புதிய அம்சங்கள் என்ன?
பான் 2.0 என்று அழைக்கப்படும் இந்த கார்டில் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கும். விரைவான சரிபார்ப்புக்கு க்யூ.ஆர் குறியீடு வசதியும் இருக்கும்.
புதிய பான் கார்டுகளை பெறக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை.. இந்த அப்கிரேட் இலவசமாகச் செய்து தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. அதாவது கூடுதலாக ஒரு ரூபாய் கூட இல்லாமல் பான் கார்ட் அப்டேட் செய்து தரப்படும்.
ஏற்கனவே பான் வைத்திருப்போர் புதிய பான் கார்டுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?
இல்லை.. நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. தற்போதுள்ள பான் கார்டுகளே செல்லுபடியாகும். புதிய கார்டுகள் ரெடியான உடன் அவை இலவசமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனால் பொதுமக்களுக்கு என்ன லாபம்?
இந்த பான் 2.0 திட்டம் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைக்கப்படும். எனவே, அரசு நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு வரும் தொடர்புகளில் பொதுவான அடையாளமாக பான் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பான் சேவைகளை மக்கள் மிக விரைவாகப் பெறலாம்.
இதனால் தொழில் நிறுவனங்களுக்கு என்ன பயன்?
PAN/ TAN சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தொழில் நிறுவனங்களும் பயனடையும். அனைத்து வகையான சேவைகளுக்கும் ஒரு ஒருங்கிணைந்த போர்ட்டல் நிறுவப்படும். இதன் மூலம் பான் சார்ந்த சிக்கல்களை எளிதாக நிவர்த்தி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications