ஜந்தர் மந்தரில் குவிந்த முக்கிய தலைகள்.. பின்வாங்கிய மத்திய அரசு! டெல்லியில் நிலைமை மாறுதே!
டெல்லி: கடந்த 20ம் தேதி போலவே, நேற்றிரவும் ஜந்தர் மந்தரிலிருந்து துணை ராணுவத்தினர் மூலம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், போராட்டக்களத்தில் அரசியல் தலைவர்கள் குவிந்ததால் மத்திய அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கிக்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் கோரிக்கை.

மாணவர்களின் கோரிக்கை
கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், கரப்பான் ஜனதா கட்சியின் (CJP) சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு ஜூலை 20 வரை கெடு விதித்திருந்தனர். அதற்குள் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனால், மத்திய அரசு இதை ஏற்கவில்லை. எனவே மாணவர்களும், இளைஞர்களும் டெல்லி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டுகள்
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தாண்டியபோது.. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். மீறி முன்னேறியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் பெல்லட் குண்டுகள் வீசப்பட்டன என்றும், மின் அதிர்ச்சி தடியை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை 150க்கும் அதிகமான முறை வினாத்தாள்கள் லீக் ஆகியிருக்கின்றன. இதை செய்தவர்கள் நல்லா ஜாலியா இருக்காங்க.. ஆனா, ஏன் வினாத்தாள்கள் லீக் ஆகியது? என்று கேட்ட எங்களுக்கு தடியடியா? என மாணவர்கள் கொந்தளித்தனர்.
மீண்டும் குவிந்த மாணவர்கள்
இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத துணை ராணுவமும், டெல்லி போலீசும் போராட்டக்காரர்களை ஜந்தர் மந்தர் பகுதிகியில் இருந்து அப்புறப்படுத்தியது. ஆனால், மீண்டும் மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அதிக அளவில் குவிந்தனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்களும் குவிந்தனர். திமுக எம்பி கனிமொழி, சிபிஎம், சிபிஐ, ஆம் ஆத்மி, சிவசேனா எம்பிக்கள் நேரில் வந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் போன்ற அரசியல் தலைவர்களும் மாணவர் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
மீண்டும் முயற்சி
இருந்தும் கூட, நேற்றிரவு மீண்டும் துணை ராணுவத்தினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். ஆனால், போராட்டக்களத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும் இருந்ததால், மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட்டது என உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியிருக்கிறார்.
மாணவர்களுக்கு உணவு
போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பலரும் ஸ்விகி, சொமட்டோ மூலம் உணவை ஆர்டர் செய்து அனுப்பி வைத்து வருகின்றனர். மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை உண்ணாவிரதம் முடியாதது என்று சோனம் வாங்சுக் அறிவித்திருக்கிறார். மத்திய அரசு இது வரை கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்து வாய் திறக்கவில்லை.
வாய் திறந்த பிரதமர்
மாறாக, நீட் வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்தி.. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் விதமாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள். மாணவர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
