விமான கட்டண முறைகேடு: திமுக தயாநிதி மாறன் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் விமான கட்டண முறைகேடுகள் தொடர்பாக திமுகவின் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய விவகாரத்துக்கு சபாநாயகர் ஓம்பிர்லா ஆதரவு தெரிவித்தார். மேலும் விமான கட்டண முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் உரிய பதில் தர வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தது லோக்சபாவில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய தயாநிதி மாறன் எம்பி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல எனவும் சாடியிருந்தார் தயாநிதி மாறன்.

இந்த நிலையில் லோக்சபாவில் தயாநிதி மாறன் எம்பி விமான டிக்கெட் முறைகேடு தொடர்பாக பேசினார். அதாவது, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிற போது முதலில் error என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் முன்பதிவு செய்து ஆன்லைனில் பணம் செலுத்த முயற்சித்தால் பெரும் அதிர்ச்சிதான் காத்திருக்கிறது. ஏனெனில் திடீரென விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தி காட்டுகிறது.
குறிப்பாக டாடா விமானங்களில் முன்பதிவு செய்யும் போது இத்தகைய நிலைமை ஏற்படுகிறது. சென்னையில் இருந்து டெல்லி செல்ல Vistara விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முதலில் ரூ33,000 செலுத்த முயன்றபோது Error என வந்தது. அடுத்த நொடியே ரூ93,000ஆக உயர்த்திக் காட்டியது. விமானப் பயணக் கட்டண பிரச்னைகளை பயணிகள் விமானங்கள் ஒழுங்காற்று அமைப்பு தீர்ப்பதில்லை. இதன் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய சதி இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, திமுக எம்பி தயாநிதி மாறன் சுட்டிக்காட்டுவது மிக முக்கியமான பிரச்சனை. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து டாடா விமான டிக்கெட் முன் பதிவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தபப்டும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் உறுதி அளித்தார். திமுக எம்பி தயாநிதி மாறன் கோரிக்கைக்கு லோக்சபா சபாநாயகரான பாஜகவின் ஓம் பிர்லா ஆதரவு தெரிவித்தது சபையில் சுவாரசியமாக இருந்தது.












Click it and Unblock the Notifications