நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.. 16 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்? என்னென்ன?
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 25) தொடங்கும் நிலையில், வக்ஃப் வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் உட்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. முழுமையான லிஸ்ட்டை இங்கே பார்க்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன. ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) தொடங்கி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற 16 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் 5 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரின்போது, தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. இந்த வாரத்திற்குள் வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக்குழு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் மசோதாக்கள்:
1. வணிகக் கப்பல் மசோதா, 2024:
2. கரையோர கப்பல் போக்குவரத்து மசோதா, 2024
3. இந்திய துறைமுகங்கள் மசோதா, 2024
4. பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா, 2024
5. ராஷ்ட்ரிய சஹ்காரி விஸ்வவித்யாலயா மசோதா, 2024
பரிசீலித்து நிறைவேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ள மசோதாக்கள்:
1. வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024
2. முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா, 2024
3. பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024
4. கோவா மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2024
5. பாரதிய வாயுயான் விதேயக், 2024: சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை ஒழுங்குபடுத்தும் விமானச் சட்ட மசோதா
6. இரயில்வே (திருத்தம்) மசோதா, 2024
7. கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்லும் மசோதா, 2024:
8. பில்ஸ் ஆஃப் லேடிங் மசோதா 2024
9. எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024:
10. பாய்லர்ஸ் மசோதா 2024
11. வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024
ஆகிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அதே சமயம், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாக்களின் தொகுப்பு இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற பட்டியலிடப்படவில்லை.
அதானி விவகாரம்: இந்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்சனைகளை இந்த கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதானி முறைகேடு - அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது தொடர்பாக, கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது நாடாளுமன்ற அவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காலை 10 மணியளவில் எதிர்க்கட்சிகள் தங்களது வியூகத்தை முடிவு செய்வதற்காக, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு கூட்டத்தை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications