டிசம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? மத்திய அரசு வைத்திருக்கும் மேஜர் பிளான்
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு அமர்வை இந்த மாத இறுதியில் மத்திய அரசு கூட்ட வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில், குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஞானேஷ்குமார் விவகார்த்தை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றவும் மத்திய அரசு தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை டிசம்பர் முதல் வாரத்தில் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறையுடன் தொடர்புடைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த குளிர் கால கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
அதாவது, நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களை 543 தொகுதிகளில் இருந்து 850 ஆக உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு வியூகம் வகுத்து வருவதாக தெரிகிறது.
எதிர்க்கட்சியில் சில எம்பிக்களின் ஆதரவு தேவை
அதேநேரத்தில் அரசியல் அமைப்பு திருத்த மசோதாக்கள் என்பதால் இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை அவசியம். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இந்த மசோதாவுக்கு தேவை. லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற மொத்தம் உள்ள 543 இடங்களில் 361 பேர் ஆதரவு தேவை.
நாடாளும்னறத்தில் தற்போது மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 320 எம்பிக்கள் ஆதரவு உள்ளது. எனவே மேஜிக் எண்ணை எட்டுவதற்கு எதிர்க்கட்சியில் உள்ள சில எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையே தற்போது உள்ளது.
மசோதாவை நிறைவேற்ற முடியும்?
எஸ்.ஐ.ஆர் விவகாரம் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டன. எனவே, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அவை எதிர்க்கட்சிகளால் முடங்க வாய்ப்பு உள்ளது.
அவை சுமூகமாக நடைபெறாவிட்டால் அரசியல் அமைப்பு சாசன திருத்த மசோதா மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்துவது சாத்தியம் இல்லை என்று ஆளும் பாஜக எம்பி ஒருவர் கூறினார். எனினும், இந்த சவால்கள் மற்றும் நம்பர் தடைகளை தாண்டி மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று அரசு நம்புகிறது.
சிறப்பு அமர்வு கூட்டம்
மத்திய அரசின் மூத்த பிரதிநிதி ஒருவர் கூறுகையில், அரசியல் அமைப்பு சாசன மசோதாக்கள் 15 முதல் 18 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட மத்திய அரசு பரிசிலித்து வருகிறதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஏனெனில், மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆகஸ்ட் 13-ல் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், கூட்டத்தொடர் இதுவரை முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை. 94 நாட்கள் ஆகியும் இன்னும் முடித்து வைக்கப்படாமலே உள்ளது.
இதனால் நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு கூட்டப்பட உள்ளதா என்பது பெரும் விவாதமாக கடந்த சில நாட்களாக சென்று கொண்டு இருக்கிறது. சிறப்பு அமர்வு கூட்ட வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டியது அவசியம்.




Click it and Unblock the Notifications
