கூடுது நாடாளுமன்றம்.. பரபரப்புக்கு நடுவே மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு.. ரெடியாகும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று அறிவித்துள்ளார்.
நம் நாட்டில் ஆண்டுக்கு 3 முறை நாடாளுமன்றம் கூடும். பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படும்.

அதன்பிறகு மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும். இது ஜூலை முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் நடக்கும். அப்போது பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றும். 2025ம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் தான் ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர்கால கூட்டத்தொடருக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‛‛ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த அனுமதி அளித்துள்ளார். அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான ஆக்கப்பூர்வ அதேநேரத்தில் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறோம்'' என்று கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை கொண்டு வந்து தாக்கல் செய்து நிறைவேற்ற முயற்சி செய்யலாம். அதேவேளையில், இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் மத்திய அரசை எதிர்க்கலாம். குறிப்பாக ராகுல் காந்தியின் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் லோக்சபா, எதிர்க்கட்சிகளில் முன்வைத்து கேள்விகளை எழுப்பலாம். அதேபோல் தற்போது SIR எனும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த 4ம் தேதி தமிழகம், கேரளா உள்பட 10க்கும் அதிகமான மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கி உள்ளது. இது டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யலாம். இதனால் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications