இந்தியாவில் திடீரென முடங்கிய இண்டர்நெட்.. செங்கடலில் துண்டான கேபிள்களால் அதிர்ச்சி! என்ன நடந்தது?
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இன்று திடீரென்று இண்டர்நெட் சேவை முடங்கி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு செங்கடலுக்கு அடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படும் நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இண்டர்நெட் சேவை அனைவருக்கும் முக்கியமானதாக உள்ளது. இண்டர்நெட் சேவை இன்றி மக்களால் இயங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதற்கிடையே தான் இன்று இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆசியாவின் பல்வேறு நாடுகளில் பலரும் இண்டர்நெட் சேவை கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் செங்கடல் பகுதியில் இண்டர்நெட் கேபிள் துண்டிக்கப்பட்டு இருப்பது தான் என்று கூறப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான 4 கேபிள்கள் நம் நாட்டின் டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் செங்கடல் வழியாக செல்கிறது. அதேபோல் Alcatel - Lucent என்ற நிறுவனம் சார்பிலும் கேபிள்கள் செல்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலமாக இண்டர்நெட் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹவுதி அமைப்பினர் இந்த கேபிள்களை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹவுதி அமைப்பை சேர்ந்தவர்கள் காசா மீதான இஸ்ரேல் போரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர்.
இதன் அடுத்தக்கட்டமாக தான் ஹவுதிகள் செங்கடல் பகுதியில் கடலுக்கு அடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்களை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளில் இன்று இண்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இணைய சேவைகளை கண்காணித்து வரும் NetBlocks முக்கிய விவரத்தை தெரிவித்துள்ளது. அதில், ‛‛செங்கடலில் துண்டிக்கப்பட்டுள்ள இண்டர்நெட் கேபிள் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஹவுதிகள் மறுத்துள்ளனர். செங்கடல் பகுதியில் இண்டர்நெட் கேபிளை நாங்கள் துண்டிக்கவில்லை என்று ஹவுதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஹவுதிகள் அல் மசிரா செயற்கைகோள் செய்தி சேனலில் செங்கடலில் இண்டர்நெட் கேபிள்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications