டெல்லி முதல்வராகும் பெண் தலைவர்? இறுதி லிஸ்ட்டில் இருக்கும் பெயர்கள்! நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 8 ம் தேதி ரிசல்ட் வெளியான நிலையில் ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படாத நிலையில் நாளை இறுதி செய்யப்பட உள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அல்லது பெண் எம்எல்ஏ ஒருவர் டெல்லியின் முதல்வராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆம்ஆத்மி கட்சி தான் ஆட்சியில் இருந்தது. கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 8 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 48 இடங்களில் வென்ற நிலையில் ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வாகை சூடி ஆட்சியை பறிகொடுத்தது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்.
இதன்மூலம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக அரியணை ஏறி உள்ளது. இருப்பினும் கூட டெல்லியின் புதிய முதல்வர் யார்? என்பதில் பாஜக மேலிடம் இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் டெல்லி முதல்வர் பதவியை பெற பலரும் முயன்று வருவது தான். இதனால் இந்த விஷயத்தில் பாஜக மேலிடம் அமைதியாக உள்ளது. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து வந்த பிறகு முதல்வரை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்தது.

தற்போது வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி முடித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். இந்நிலையில் தான் நாளை (திங்கட்கிழமை) டெல்லியின் புதிய முதல்வர் யார்? என்பது தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது முதல்வர் தேர்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் குழுவையும் பாஜக மேலிடம் அமைத்துள்ள நிலையில் இந்த குழு இன்று நள்ளிரவு அல்லது நாளை காலையில் முதல்வர் வேட்பாளரை இறுதி செய்யும். அதன்பிறகு நாளை மதியத்துக்கு பிறகு டெல்லியில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
தற்போதைய சூழலில் டெல்லி முதல்வர் பதவிக்கு முன்னிலையில் இருப்பது பர்வேஷ் வர்மாவின் பெயர் தான். புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா 2 முறை எம்பியாக இருந்துள்ளார். அதோடு டெல்லி முன்னாள் முதல்வர் சாகேப் சிங் வர்மாவின் மகன் ஆவார். அதேபோல் டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், மால்வியா நகர் எம்எல்ஏவுமான சதீஷ் உபாத்யாய் பெயரும் முன்னிலையில் உள்ளது. இதுதவிர பாஜக மூத்த தலைவர் விஜயேந்தர் குப்தா, ஜனக்பூர் எம்எல்ஏ ஆஷிஷ் சூத் மற்றும் உத்தம் நகர் எம்எல்ஏ பவன் ஷர்மா உள்ளிட்டவர்களின் பெயர்களும் முன்னிலையில் இருந்து வருகிறது.
ஒருவேளை பாஜக பெண் ஒருவரை டெல்லி முதல்வராக்க நினைக்கலாம். தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது. இருப்பினும் பெண் முதல்வர் யாரும் இல்லை. மேற்கு வங்கத்தில் மட்டுமே மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். அவரும் பாஜக கூட்டணி இல்லை. இதனால் பாஜக ஒருவேளை பெண் ஒருவரை முதல்வராக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் டெல்லி முதல்வராக பாஜகவின் நீலம் பஹால்வான், ரேகா குப்தா, பூனம் ஷர்மா, ஷிகா ராய் ஆகிய 4 பேரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று கூறப்படுகிறது.
நாளைய தினம் முதல்வர் பெயர் இறுதி செய்யப்பட்ட பிறகு பதவியேற்பு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படும். அதன்பிறகு மிக பிரமாண்டமாக பதவியேற்பு விழாவை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பதவியேற்பு விழாவை டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications