ஆச்சரியம்.. அதிர்ச்சி! தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமம் - சிக்னலின்றி தவிக்கும் பர்லியாறு மக்கள்
நீலகிரி மாவட்டம் பர்லியாறு கிராமத்தில் ஒரு புள்ளி கூட செல்போன் சிக்னல் கிடைக்காமல் கிராம மக்களும், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் 5ஜி செல்போன் அலைவரிசை சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்து அது செயல்பாட்டிற்கு வந்து உள்ள நிலையில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு என்ற கிராமத்தில் ஒரு புள்ளி கூட செல்போன் சிக்னல் கிடைக்காமல் கிராம மக்களும், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும் கடும் துயருக்கு ஆளாகி வருகிறார்கள்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கொண்டே தற்போது உலகின் வளர்ச்சியே அளவிட முடிகிறது. இணையதள வேகம், தொலை தொடர்புத்துறையின் வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளில் பல வேலை வாய்ப்புகளும் தொழில்வாய்ப்புகளும் உருவாகின்றன.
கற்றல் திறன், வெளியுலக அறிவு போன்றவை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கூடுதலாக கிடைக்கின்றன. உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அது வளர்ச்சியடைந்து இருக்கிறது.

5ஜி அலைவரிசை
இந்தியாவில் 4ஜி சேவை தற்போது பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5ஜி சேவையை சில ஆண்டுகளுக்கு முன்பே பல வளர்ந்த நாடுகள் தொடங்கிவிட்டன. 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் செல்போன்களும் இந்தியாவில் சந்தைக்கு வந்துவிட்டன. 5ஜி அலைவரிசையில் 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகள் கிடைக்கும்.

இந்தியாவில் 5ஜி
கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் இந்தியாவில் தொடங்கியது. பாரதி ஏர்டெல், வோடபோன் - ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, அதானி ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. இதில் அதிகளவிலான அலைவரிசையை ஜியோ நிறுவனம் ஏலத்துக்கு எடுத்து உள்ளது. கடந்த 2022 அக்டோபர் மாதம் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

செல்போன் பயன்படுத்த முடியாத கிராமம்
இப்படி ஒருபக்கம் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் சூழலில் தமிழ்நாட்டின் ஒரு கிராமமே செல்போன் சிக்னல் இன்றி அதை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் தகவலை உங்களால் நம்ப முடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை. அப்படி ஒரு கிராமம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.

பர்லியாறு கிராமம்
இந்தியாவின் முன்னணி சுற்றுலா தலமான ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது பர்லியாறு என்ற மலை கிராமம். குன்னூர் தாலுக்காவுக்கு உட்பட்ட இந்த பர்லியாறு கிராமத்தை கடந்தே தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

வியாபாரிகள் பாதிப்பு
குன்னூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பர்லியாறு கிராமத்தில் சாலையை ஒட்டி பிரபலமான சந்தை உள்ளது. இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்தி தேனீர் அருந்துவது, பழங்கள், காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். ஆனால், இங்குள்ள எந்த கடையிலும் கூகுள் பே போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை கிடையாது.

சுற்றுலா பயணிகள்
அதற்கு காரணம், இந்த கிராமத்தில் செல்ஃபோனில் சிக்னலே கிடைக்காது என்கிறார்கள் வியாபாரிகள். இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், பலர் இங்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்குவதற்கே தயங்குவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். அதேபோல் இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் பழுது ஏற்பட்டாலும் செல்போன் சிக்னல் இல்லாமல் அவதியடைவதாக கூறுகின்றனர்.

வனப்பகுதிக்கு சென்ற மக்கள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற நிலையில், இந்த கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் செல்போன் சிக்னலுக்காக வனப்பகுதிக்கு சென்று பாடம் பயின்று வந்தனர். ஒரு போன் பேச வேண்டுமென்றால் கூட மேட்டுப்பாளையம் அல்லது குன்னூர் செல்லும் நிலை உள்ளதாகவும், இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications