2 லிட்டருக்கு மேல் கிடையாது! பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு! இந்தியாவில் தான் எங்க தெரியுமா
டெல்லி: பைக்குகளுக்கு ரூ.200-க்கு மேல் ஒருநாளைக்கு பெட்ரோல் கிடையாது, கார்களுக்கு ரூ.500 க்கு மட்டுமே பெட்ரோல் போட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..
இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை பார்ப்பது அரிது ஆகிவிட்டது. பக்கத்துக்கு தெருவிற்கு போக வேண்டும் என்றாலும் கூட பைக்கில் செல்லும் அளவுக்கு இருசக்கர வாகன பயன்பாடு அதிகரித்து விட்டது. அதேபோல், நடுத்தர மக்கள் கூட இப்போது கார் வாங்குவதை பார்க்க முடிகிறது.

டீசல், பெட்ரோலுக்கு கட்டுப்பாடு: மக்களின் அத்தியாவசிய பட்டியலில் எரிபொருளும் இடம் பெற்றுள்ள நிலையில் ஒருநாளைக்கு 200 க்கும் மேல் பெட்ரோல் போட அனுமதி இல்லை என்று அரசு கட்டுப்பாடு விதித்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள்... அப்படியான ஒரு கட்டுப்பாடுதான் இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் ஏன் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரத்தை விரிவாக பார்க்கலாம்..
மண் சரிவு ஏற்பட்டதால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று திரிபுரா. அதிகம் மலைப்பகுதிகளையும் இயற்கை வளங்களையும் கொண்ட இந்த மாநிலம் அசாம் மற்றும் மேகலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ளது. திரிபுராவில் கடந்த புதன்கிழமையில் இருந்து பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால், திரிபுராவின் அண்டை மாநிலமான அசாமின் ஜடிங்காவில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையும் பாதிக்கபட்டது. இதையடுத்து முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்றன.
ரயில் போக்குவரத்து பாதிப்பு: இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திரிபுராவிற்கு பெட்ரோல், டீசல் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால், பெட்ரோல், டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கார்களுக்கு ரூ. 500 மேல் கிடையாது: இதனால், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. பைக்குகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.500 மட்டுமே பெட்ரோல் போட வேண்டும்.
பேருந்துகளுக்கு 60 லிட்டர் டீசலும் மினி பேருந்துகளுக்கு 40 லிட்டரும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு 15 லிட்டர் டீசலும் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று திரிபுரா மாநில அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாம்.
மாநில அரசு விளக்கம்: இது தொடர்பாக திரிபுரா மாநில அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:- அசாமின் திமா ஹசோ மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில்வே டிராக்குகள் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பயணிகள் ரயில் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரவு நேரத்தில் ரயில் சேவை அனுமதிக்கப்படவில்லை. இதனால் சரக்கு ரயில்கள், இரவு நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மறுசீரமைப்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில் சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications