Mutton + Chicken: இனி எல்லா நாட்களிலும் சிக்கன் - மட்டன் கிடையாது? நாள்காட்டி வெளியிட மத்திய அரசுக்கு ‛டிமாண்ட்'
மும்பை: சர்ச்சை மற்றும் பிரச்சனைகளை தவிர்க்க மத்திய அரசு சார்பில் எந்தெந்த நாட்களில் மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். எந்தெந்த நாட்களில் மட்டன் - சிக்கன் (Mutton - Chicken) விற்பனை செய்யக்கூடாது என்பதன் அடிப்படையில் ஆண்டு காலண்டரை வெளியிட வேண்டும் என்று இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பு (Poultry Federation of India) சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு தற்போது மகாராஷ்டிராவில் எழுந்த பிரச்சனை தான் காரணம். இதுபற்றிய விவரம் வருமாறு:
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சுதந்திர தினத்தையொட்டி மட்டன், சிக்கன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று மகாராஷ்டிராவில் சில உள்ளாட்சி நிர்வாகங்கள் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நாக்பூர், நாசிக், மலேகான், சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் கல்யாண் டொம்பிவிளி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் சிக்கன், மட்டன் கடைகள், கால்நடைகளை பலி கொடுக்கும் கூடங்களை மூட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் மாவட்ட வாரியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இதுதொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக நம் நாட்டில் சில முக்கிய பண்டிகை, விரத நாட்கள் மற்றும் தலைவர்களின் பிறந்தநாளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராம் நவமி, மகா சிவராத்திரி, காந்தி ஜெயந்தி, வால்மிகி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டு வரும் நிலையில் சுதந்திர தினத்தையொட்டி இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பு சார்பில் மத்திய மீன், கால்நடை மற்றும் பால்வளத்துறையின் இணை அமைச்சர் எஸ்பி சிங் பாகேலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛மகாராஷ்டிராவில் சுதந்திர தினத்தையொட்டி கடைசி நேரத்தில் மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களின் வணிகத்தை பாதிக்கிறது. திடீர் உத்தரவால் தினசரி கூலித் தொழிலாளர்கள், கறிக்கடை உரிமையாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஒரு காலண்டரை வெளியிட வேண்டும். அதில் எந்தெந்த நாட்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். எந்தெந்த நாட்களில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்பதை குறிப்பிட வேண்டும். இதன்மூலம் இறைச்சி தொழிலை நம்பியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்புத் தலைவர் ரன்பால் தண்டா கூறுகையில், ‛‛இறைச்சி கடைகளை மூடப்படுவது பற்றி குறைந்தது3 மாதங்களுக்கு முன்பே தகவல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை'' என்று வருத்தத்தை பதிவு செய்தார். இந்நிலையில் தான் தற்போதைய இந்த கடிதம் பேசும் பொருளாக உள்ளது. இறைச்சி விற்பனை தொடர்பாக எழும் சர்ச்சை மற்றும் பிரச்சனைகளை தவிர்க்க நாடு முழுவதும் இறைச்சி விற்பனை காலண்டரை மத்திய அரசு வெளியிடுகிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தற்போது வரை இதுபற்றி மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications