நடுவானில் குலுங்கிய டெல்லி விமானம்.. தூக்கி வீசப்பட்ட பயணிகள்.. சாவு பயம் காட்டிய ‘ஏர் இந்தியா'
டெல்லி: தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு 134 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று வந்து கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்தபோது திடீரென்று குலுங்கியது. இதில் இருக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகரில் இருந்து டெல்லிக்கு 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ379 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 134 பயணிகள் பயணித்தனர்.
வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானம் குலுங்கியது. வான்வெளி பரப்பில் திடீரென்று விமானம் Turbulence-யில் சிக்கியது. இதனால் விமானம் குலுங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர். டர்புலன்ஸில் இருந்து தப்பிக்க பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்த நிலையில் பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் 2 விமான பணியாளர்கள் உள்பட 12 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது. அதேபோல் விமானத்தின் சில இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விமானம் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் பத்திரமாக தரையிறங்கியது.
இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில், ''விமானம் வானில் பறந்தபோது திடீரென்று குலுங்கியது. விமானத்தின் உயரம் சட்டென குறைக்கப்பட்டது. இதனால் என் தலை விமானத்தின் மேற்கூரையில் மோதியது. நான் கீழே விழுந்தேன். சில பயணிகளுக்கு தலையில் லேசான காயமும், உடலில் பிற இடங்களில் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.
இந்த சம்பவத்தை 'ஏர் இந்தியா' நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ''இன்று புக்கெட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ 379 என்ற விமானம் பயணித்தது. நடுவானில் டர்பிளன்ஸில் சிக்கியது. இதில் விமான பணியாளர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 12 பேர் காயமடைந்தனர்.
விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சோதனை, சிகிச்சை அளிக்க ஊழியர்கள் விமான நிலையத்தில் உள்ள மருத்துவ மையத்துக்கு அழைத்து சென்றனர். யாருக்கும் தீவிரமான காயம் ஏற்படவில்லை.
ஏர் இந்தியாவை எடுத்து கொண்டால் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினரின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். விசாரணை அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்'' '' என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
